தனித்துவங்களின் கோட்டைகளுக்குள் தடுமாறும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முஸ்லிம் தலைமை

சுஐப் எம். காசிம்

நல்லாட்சி அரசின் சுவாசம் நின்றுவிடுமளவுக்கு கொடிய நோய்கள் அரசாங்கத்தைப் பீடித்துள்ளன. ‘கூழ் குடிக்கவும் கூட்டாகாது’ என்ற பழமொழிக்கு இந்த நல்லாட்சி நல்லதொரு உதாரணம். பிரதமர் ஒன்றைச் சொல்ல, ஜனாதிபதி அதைப் பொருட்படுத்தாது செல்ல, அமைச்சர்கள் எதையும் கண்டுகொள்ளாது செயற்படவென்று பதக்கடைச் சாக்கு வண்டிபோல் அசைந்து சென்ற இந்த அரசின் பயணம் இன்னும் ஒன்றரை வருடங்களுக்குள் ஓய்வுக்கு வரும். ஆட்சி அமைத்துள்ள ஐ.தே.கவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் எட்டாப்பொருத்தமேற்பட்டு, பங்காளிக் கட்சிகளுக்குள்ளும் அடிக்கடி குழப்பங்கள் எழுவதால் நாட்டு நிலவரங்களை அறிவதில் மக்களும் அக்கறையற்றுள்ளனர். 

மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் விரைவில் நடத்துவதில் பிரதமர் ரணிலுக்குள்ள ஆர்வம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் இல்லை. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரைப் பொது வேட்பாளராக இறக்குவதென்ற பலப்பரீட்சைக் களமாகவே மாகாண சபைத் தேர்தல்கள் அமையப்போகின்றன. ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரா? அல்லது மைத்திரியை பொது வேட்பாளராக்குவதா? என்ற பிரச்சினைக்கு இத்தேர்தல் தீர்வாக அமையலாம். அதிக ஆசனங்களைக் கைப்பற்றும் கட்சியின் தலைவருக்கே ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராவதற்கான வாய்ப்புள்ளன. இல்லாவிடின் மும்முனைப் போட்டிகளுக்கே சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும். 


இவ்வாறான நிலையில்  மஹிந்தவின் அணிக்கு வெற்றி சுலபமென்பது எளிய கணக்கு. உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள்  இதனை மெய்ப்பித்துள்ளன. இந்தக் கணக்கும், களக்குழப்பமும் பிரதமரையும், ஜனாதிபதியையும் தனித்தனித் தேர்தல் களங்களுக்கும் அனுப்பலாம். இதன் முன்னோடியாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவுத் தலைவராக அமைச்சர் பைஸர் முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறான ஒரு பிரிவு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒரு போதும் தேவைப்பட்டிருக்கவில்லை. 

முஸ்லிம் காங்கிரஸின் வருகைக்குப் பிறகு குறிப்பாக மர்ஹூம் அஷ்ரஃபின் காலத்தில் இக்கட்சிக்கு இது கட்டாயத் தேவையாக இருந்தது. இதனால் அவசர, அவசரமாக இவ்வாறான பிரிவு உருவாக்கப்பட்டு அமைச்சர் பௌஸி சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவுத் தலைவராக்கப்பட்டார்.

 முஸ்லிம்களின் தேசிய தலைவர் யாரென்ற போட்டி அஷ்ரஃபுக்கும் பௌஸிக்கும் இடையில் எட்டியிருந்த காலத்தில் இந்த முஸ்லிம் பரிவு உருவாக்கப்பட்டது. எனினும், அஷ்ரஃபின் தனித்துவக் கட்சிக்கே தேசிய தலைமைக்கான அங்கீகாரத்தை முஸ்லிம்கள் வழங்கினர். அதுமட்டுமன்றி, இந்தப் பிரிவின் செயலாளரான மர்ஹூம் அலவி மௌலானா மர்ஹூம் அஷ்ரஃ;புடன் மிகவும் நெருக்கமான உறவை வளர்த்தமை இங்கு குறிப்பிடப்படவேண்டிய ஒன்று.  

அஷ்ரஃபின் மறைவுக்குப் பின்னர் தேசிய தலைமைக்கான அங்கீகாரத்தை முஸ்லிம் காங்கிரஸ் இழந்ததால், கிழக்கு மாகாண முஸ்லிம்களின் வாக்குகள் எடுப்பார் கைப்பிள்ளை நிலைக்குச் சென்றன. இதை நன்கு பயன்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் யுக்தியாக அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் கழுத்தில் கயிறு பாய்ந்துள்ளது. கிழக்கில் இன்றுள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸூக்கு நிகராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் இன்னும் களத்தில் ஓடும் கட்சியாக தேசியக்காங்கிரஸூம் உள்ளன.

இத்தனை சவால்களையும் கடந்து முஸ்லிம்களின் வாக்குகளை சுதந்திரக கட்சி முஸ்லிம் பிரிவு பெற்றுக்கொள்ள முடியுமா?  ஹிஸ்புல்லா, பௌஸி, மஸ்தான் ஆகியோரின் தயவிலும், திறமையிலும் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும். தமிழ்  மொழியில் பரிச்சயமில்லாத முஸ்லிம் தலைமைகள் கிழக்கிலும் சாதித்த சரித்திரம் இல்லை. தேசியக கட்சிகளின் முஸ்லிம் தலைவர்களாக நேசிக்கப்பட்ட சேர் ராசிக் பரீத், டாக்டர் பதியுதீன் மஹ்மூத் ஆகியோரையும் இந்தப் பின்னணியே தோற்கடித்தது. 

மற்றும் முஸ்லிம்களுக்குத் தேவைப்படாத, முஸ்லிம்களின் பிரதிநிதித்து வங்களை கேள்விக்குள்ளாக்கின்ற புதிய முறையிலே தேர்தலை நடத்த வேண்டுமென்ற பிடியில் அமைச்சர் பைஸர் முஸ்தபாவும் அவரது கட்சிக்காரர்களும் உறுதியாகவுள்ளனர். கிழக்கில் முஸ்லிம்கள் கோரும் தனியான அலகு, அதிகாரப்பரவலாக்கம் என்பன தென்பகுதியில் வாழும் முஸ்லிம்களைப் பாதிக்கும் என்பதும் பைஸர் முஸ்தபாவின் தனிப்பட்ட நிலைப்பாடு.

இவ்வாறு கிழக்கின் தனித்துவத்திலிருந்து  வேறுபட்டுள்ள ஒருவர், தேர்தலுக்காக கிழக்கில் கால்வைத்ததும் முஸ்லிம் கட்சிகளின் எறிகணைகள் இவர்மீது ஏவப்படும்.

சிங்களத் தேசியவாதத்திடம் முஸ்லிம்களைக் காட்டிக்கொடுப்பதற்கான அளவுகோலாகவும் சித்தரிக்கப்படலாம்.  இந்த எறிகணைகள், அம்புகளைத் தாங்கி, தாண்டி கிழக்கில் முஸ்லிம்களின் வாக்குகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இவரின் தலைமையில் பெறமுடியாது. இந்த உண்மை பௌஸி, ஹிஸ்புல்லா, மஸ்தான் ஆகியோருக்கும் புரிந்திருக்கும். 

வடக்கு கிழக்கு மாகாண முஸ்லிம் வாக்குகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இலகுவாக பெறுவதற்குள்ள ஒரே யுக்தி, முஸ்லிம் தலைமைகளை தம் பக்கம் ஈர்ப்பதே. இதை கச்சிதமாக சாதிப்பது பற்றியே அமைச்சர் பைசர் முஸ்தப்பா சிந்திக்க வேண்டியுள்ளது. 

இத்தனைக்கும் மு.காவும், ம.காவும் அரசுடன் இருந்தாலும் கிழக்குத் தேர்தலில் பேசப்படப் போவது சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவே.  இதைக் கச்சிதமாகப் புரிந்துள்ள ரணில், முஸ்லிம் காங்கிரஸையும் மக்கள் காங்கிரஸையும் தன்வசம் வைத்துக் கொண்டு காய்களை நகர்த்தலாம். இக்காய்கள் சரியான குழிகளுக்குள் வீழ்த்தப்படுமா? என்பதே இன்றுள்ள கேள்வி. இந்தச் சூழ்நிலைகள் முஸ்லிம்களின் வாக்குகளைப் பேரம்பேசும் நிலைக்கும் அழைத்துச் சென்றால் என்ன செய்ய வேண்டும். என்பதை இன்னும் முஸ்லிம் தலைமைகள் சிந்தித்ததாகத் தெரியவில்லை. 

இவ்வாறான ஒரு ஒற்றுமை ஏற்படுத்துவதற்கு மக்கள் காங்கிரஸூம், முஸ்லிம் காங்கிரஸூம் இணக்க அரசியலுக்குள் வரவேண்டுமென்பதே பலரது விருப்பம். தேசிய அரசியலில் ஒரு அணியில் (ஐ.தே.க) இணைய முடியுமென்றால், பேரம் பேசும் பலத்தை உருவாக்க ஏன்? இவ்விரு கட்சிகளும் ஓரணியில் இணையமுடியாது என்பதே பலரின் கேள்வி.