ஹரீஸ் தலைமையில் ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனைத் தொகுதி ஆட்சி மன்றக் குழு’ உதயம்

(அகமட் எஸ். முகைடீன்)

அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் கல்முனைத் தொகுதியின் அபிவிருத்தி உள்ளிட்ட மக்கள் நலன்சார் வேலைத்திட்டங்கள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனைத் தொகுதி ஆட்சி மன்றக் குழு’ உருவாக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் ஏற்பாட்டில் இன்று (7) சனிக்கிழமை காலை சாய்ந்தமருது சுகாதார நிலையத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கல்முனைத் தொகுதி நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கூட்டத்தின்போதே மேற்படி குழு உருவாக்கப்பட்டுள்ளது. 

இக்கூட்டத்தில் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப், கல்முனை மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பான உறுப்பினர்கள், கல்முனை மாநகர சபைத் தேர்தல் 2018இல் போட்டியிட்ட வேட்பாளர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கல்முனைத் தொகுதியிலுள்ள அமைப்பாளர்கள், அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

பிரதி அமைச்சர் ஹரீஸ் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனைத் தொகுதி ஆட்சி மன்றக் குழுவின் செயலாளராக கல்முனை மாநகர சபைத் தேர்தல் 2018 இன் நற்பிட்டிமுனை வட்டார பட்டியல் வேட்பாளர் எம்.எம். றியாஸ், பொருளாளராக கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சத்தார், உப தலைவர்களாக கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மருதமுனை அமைப்பாளருமான சட்டத்தரணி ஏ.எம். றகீப், ஏ.எல்.எம். ரசீத் (புர்கான் ஹாஜியார்), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை அமைப்பாளர் யூ.எல். தௌபீக் ஆகியோரும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களாக கல்முனை மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பான உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கல்முனைத் தொகுதியிலுள்ள அமைப்பாளர்கள், கல்முனை மாநகர சபைத் தேர்தல் 2018இல் போட்டியிட்ட வேட்பாளர்கள், அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்கள் ஆகியோரும் செயற்படவுள்ளனர். 

அரசின் ‘கம்பெரலிய’ வேலைத்திட்டத்தின் மூலம் கல்முனை மாநகர பிரதேசத்தில் 200 மில்லியன் ரூபாவில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வேலைத்திட்டங்களை அடையாளப்படுத்தி முக்கிய தீர்மானங்களை மேற்கொள்கின்ற பணியினை இக்குழுவே மேற்கொள்ளவுள்ளது.

  

மாதம் ஒரு முறை கூடவுள்ள இக்குழுவின் உப குழுக்களாக அபிவிருத்தி ஆலோசனைக் குழு மற்றும் கல்வி ஆலோசனைக் குழு என்பனவும் அமைக்கப்படவுள்ளன. இவ் உப குழுக்களின் உறுப்பினர்கள் துறைசார்ந்தவர்களாக தெரிவுசெய்யப்படவுள்ளனர். இதற்கான உறுப்பினர்கள் தெரிவுக்கான பெயர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனைத் தொகுதி ஆட்சி மன்றக் குழுவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் அடுத்த மாதக் கூட்டத்தின்போது பரிந்துரை செய்யவுள்ளனர்.

மேலும் கல்முனை மாநகரத்தை ஊழலற்ற நகரமாக உறுதிப்படுத்தும்வகையில் ஊழல் எதிர்ப்பு முன்னணி ஒன்றும் உருவாக்கப்படவுள்ளது. இம்முன்னணியானது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுடையோர் தொடர்பில் அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கைக்கான நகர்வுகளை முன்னெடுக்கவுள்ளனர். 

இன்றைய கூட்டத்தின்போது தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய அலுவலகத்தை சாய்ந்தமருதில் அமைப்பது, மாநகர சபைக் கூட்டத்திற்கு முன்னதாக ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்தை நடத்துவது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனைத் தொகுதி ஆட்சி மன்றக் குழுவினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை சந்தித்து இக்குழுவின் செயற்பாடு தொடர்பில் எடுத்துரைப்பது, கல்முனைத் தொகுதியிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்வகையில் இங்குள்ள திணைக்களங்களின் தலைவர்களுடன் கூட்டமொன்றை நடத்துவது, கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை கௌரவிப்பது போன்ற தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை கௌரவிப்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஆரம்பித்த காலம் முதல் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களாக செயற்பட்ட 75 வயதுக்கு மேற்பட்டவர்கள், அக்கால கட்டத்தில் கட்சி சார்பாக தேர்தல்களில் போட்டியிட்டவர்கள் ஆகியோர் கௌரவிக்கப்படவுள்ளனர்.