இன்னும் மக்களுக்கு சேவையாற்றி வருகின்ற மஹிந்தவுக்கு மங்களாவுடன் விவாதம் புரிய நேரமில்லை : நாமல்

நிதியமைச்சர் மங்கள சமரவீர மகிந்த ராஜபக்சவிடம் விவாதத்திற்கு வரும் முன் வேலையை செய்து காட்டுமாறும், விவாதம் செய்து கொண்டிருக்க மகிந்தவுக்கு நேரமில்லை இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 அரச கடன் சம்பந்தமாக விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் மங்கள சமரவீர விடுத்துள்ள அழைப்பு தொடர்பாக பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.மங்கள சமரவீரவுடன் விவாதம் நடத்திக்கொண்டிருக்க மகிந்த ராஜபக்சவிற்கு நேரமில்லை. மகிந்த ராஜபக்ச இன்னும் மக்களுக்கு சேவையாற்றி வருகிறார்.அத்துடன் மகிந்த ராஜபக்ச செயலில் வேலை செய்து காட்டிய தலைவர். 
 
அரசாங்கம் கடந்த மூன்று ஆண்டுகளாக கதைகளை பேசியதே தவிர செய்தது எதுவுமில்லை.விவாதங்களை நடத்தும் முன்னர் வேலையை செய்து காட்டுங்கள். வேலைகளை செய்யாது விவாதங்களுக்கு வருமாறு கூறுவது கேலிக்குரியது. தென் மாகாணத்தில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் காரணமாக குழந்தைகள் பலியாகி வருகின்ற நேரத்தில் அரசாங்கத்தால் தெளிவான வேலைத்திட்டத்தை முன்வைக்க முடியாது போயுள்ளது.அத்துடன் பாதாள உலகக்குழுக்கள் தலைத்தூக்கியுள்ளன.
இளைய வயதினருக்கு இடையில் போதைப்பொருள் பாவனையும் அதிகரித்துள்ளது.இந்த நிலையில் அரசாங்கம் வீணாக பேசிக்கொண்டிருக்காது இந்த பிரச்சினைகளையாது தீர்க்க வேண்டும். அபிவிருத்தி என்பது தற்போதைய அரசாங்கத்திற்கு கனவு மட்டுமே எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.