கூட்டு எதிர்க்கட்சியினரில் சிலர் நல்லாட்சி என்ற போர்வைக்குள், தமது ஊழல், மோசடிகளை மறைக்கும் மேடையாக பயன்படுத்திக் கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு தொட்டலங்கவில் பகுதியில் உள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்ளை பகிர்ந்தளித்த பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.நல்லாட்சிக்குள் புகுந்து கொண்ட ஊழல்வாதிகள், ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.
இந்த நிலைமையில், நல்லாட்சியில் மக்களின் நலன்களுக்காக செயற்படுவதை விட, அரசாங்கத்திற்குள் இணக்கத்தை ஏற்படுத்தும் நெருக்கடியை தீர்க்க காலம் செலவானது.தேசிய அரசாங்கத்தில் இரண்டு தரப்பிலும் குறைப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் எனினும் அனைவரும் இணைந்து நாட்டுக்காக பணியாற்ற வேண்டும் என நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பின் போது கருத்து வெளியிட்ட பிரதமர், அனைத்தையும் மறந்து விட்டு, எதிராக வாக்களித்தவர்களை இணைந்து பணியாற்ற வருமாறு அழைப்பு விடுத்தார். பிரதமரிடம் இருக்கும் நாட்டிற்கான அர்ப்பணிபே இதற்கு காரணம்.எந்த நிலைமையானலும் தேசிய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லப்படும்.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் காணப்படும் சிறந்த புரிந்துணர்வு காரணமாக நல்லாட்சி அரசாங்கத்திற்கு எவராலும் சவால் விடுக்க முடியாது.நல்லாட்சி அரசாங்கத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்ல, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர, அமைச்சர் மகிந்த சமரசிங்க ஆகியோர் மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்பு மூலம் சிறந்த முன்னுதாரணத்தை காட்டியுள்ளனர்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றி பெற்றதன் மூலம் நல்லாட்சி அரசாங்கத்தின் காலை பிடித்து இழுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் யார் என்பதை அடையாளம் காண முடிந்தது எனவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.