அமைச்சு பதவிகள் உட்பட முழு அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்த சகல ஏற்பாடுகளும் தயார்ப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அது சம்பந்தமான ஐக்கிய தேசியக்கட்சியின் இறுதியான இணக்கப்பாடு இன்னும் கிடைக்கவில்லை என ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக்கட்சியின் இணக்கப்பாடுகள் கிடைத்தால், அமைச்சரவையில் உடனடியாக மாற்றங்களை ஏற்படுத்த முடியும் எனவும் அப்படியில்லை என்றால், ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயத்திற்கு பின்னரே அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் எனவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் அமைச்சு பதவிகளுக்காக பெயர் பட்டியலை தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் கட்சிக்குள் காணப்படும் சில பிரச்சினைகள் காரணமாக அதனை நிறைவு செய்ய முடியாதுள்ளதாகவும் ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ள எஸ்.பி. திஸாநாயக்க வகித்து வந்த சமூர்த்தி, சமூக வலுவூட்டல், நலன்புரி, மலைநாட்டு மரபுரிமைகள் அமைச்சுக்குரிய சமூகவலுவூட்டல் ,சமூக நலன்புரி துறைகளை ஐக்கிய தேசியக்கட்சி கோரியுள்ள போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் அதற்கு சாதகமான பதில் வழங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியினருக்கு வழங்கப்பட்டு வந்த சமூர்த்தி வெட்டப்பட்டதாகவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க பணிகளை சரியாக மேற்கொள்ளவில்லை எனவும் தாம் அரசாங்கத்தில் அங்கம் வகித்த போதிலும் தமது கட்சியினருக்கு நிவாரணங்களை வழங்க முடியாது போனதாகவும் ஐக்கிய தேசியக்கட்சியினர் கூறியுள்ளனர்.
எது எப்படி இருந்த போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தரப்பில் வெற்றிடமாகும் அமைச்சு பதவிகளுக்கு அந்த கட்சியின் அமைச்சர்களே நியமிக்கப்படுவார்கள் எனவும் அந்த அமைச்சுகளுக்கான துறைகளை அப்படியே வைத்துக்கொள்ள அவர்கள் இணங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.மேலும் ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவி ஒன்றை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எனினும் அமைச்சுக்களுக்கான துறைகள் சம்பந்தமான ஏற்பட்டுள்ள பிரச்சினையால் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.