பிரதியமைச்சர் ஹரீஸ் பிரதமரை இகழ்வது அமைச்சர் ஹக்கீமுக்கு பல வகையிலும் பாதகமானது

நேற்று மு.காவின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் உயர்பீட கூட்டமொன்று நடைபெற்றிருந்தது. இக் கூட்டத்தில் உள்ள விசேடம் பிரதி அமைச்சர் ஹரீசுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோசம் மேல் எழுந்தமையாகும். அலசிப் பேச ஆயிரம் இருக்க, ஆர்வமூட்டி அமக்களப்படுத்த வேண்டிய விடயத்துக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான பேச்சு. கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் மிக தைரியமாக முஸ்லிம் சமூகத்துக்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் குரல் கொடுத்ததை  யாராலும் மறுக்க முடியாது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லாம் மு.காவின் அடுத்த தலைவன் யார் என்ற வினாவுக்கு, அவரது பேச்சுக்கள் பதில் வழங்கிக்கொண்டிருந்ததன. இது கிழக்கு மாகாண மக்களுக்கு மிகவும் அவசியமான பதிலாகும். இதனை அமைச்சர் ஹக்கீமும் நன்கே அறிவார். இது மு.காவின் தலைவரான அமைச்சர் ஹக்கீமுக்கு உசிதமானதல்ல. இவ்வாறான பிரதி அமைச்சர் ஹரீசின் பேச்சுக்களின் மூலம் முஸ்லிம்களின் எதிரிகள் அஞ்சினார்களோ இல்லையோ, அமைச்சர் ஹக்கீம் நிச்சயம் அஞ்சியிருப்பார்.

அவ்வாறான பேச்சுக்களின் பின்னர் பிரதி அமைச்சர் ஹரீஸை மட்டம் தட்டும் சில செயற்பாடுகள் மு.காவில் நடை பெற்றிருந்தன. இது பற்றி அரசியல் களத்தில் ஆழமாக நீந்துவோர் நிச்சயம் அறிந்திருப்பர். சில காலம் அமைச்சர் ஹக்கீமுக்கும், பிரதி அமைச்சர் ஹரீசுக்கும் இடையில் இடைவெளி ஒன்றும் ஏற்பட்டிருந்தது. அக் காலத்திலேயே வட – கிழக்கு இணைப்பு தொடர்பான பிரதி அமைச்சர் ஹரீசின் கூற்றை, அவர் அருகில் இருக்கத்தக்க நிலையிலேயே அமைச்சர் ஹக்கீம் மறுதலித்து பேசியிருந்தார். இதன் பின்னர் பிரதி அமைச்சர் ஹரீசும், தனது பேச்சிலுள்ள காரத்தை குறைத்து பேசியிருந்தார் என்றே கூற வேண்டும். இது பயத்தினால் என்பதை விட “ தருணம் பார்த்து பாயவுள்ளார் ” என்பதே பொருத்தமானது. இதன் அர்த்தம் புரிய சில காலம் எடுக்கலாம்.

FILE IMAGE

அண்மைக் காலமாக பிரதமர் ரணிலை பிரதி அமைச்சர் ஹரீஸ் மிகவும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இவரது விமர்சனங்களில் நியாயங்கள் நிரம்பி வழிகின்றன. அம்பாறை பள்ளி உடைப்பு தொடர்பாக பேச, மு.கா அழைத்து வந்த பிரதமர், ஒலுவில் துறைமுகம் வந்து சென்றால், சமூகத்தின் மீது பற்றுக்கொண்டவர்களுக்கு கோபம் வரத் தான் செய்யும். அதனை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவமும், அவரைப் போன்ற சில போராளிகளும் பெரிய சாதனைய காட்ட முனைந்தனர். அவர்கள் பிரச்சினை வேறு. அது பற்றி எல்லம் வேலை உள்ள நேரங்களில் பேசுவது வீண் செயலாகும். இதற்கு பிறகும் பிரதமர் ரணிலை பூசி மெழுகி வேலை இல்லை என்பதுவே யதார்த்தம்.  யதார்த்தத்தை அறிந்து கொண்ட பிரதி அமைச்சர் ஹரீஸ், அதன் பாதையில் பயணிக்க தொடங்கினார். அவர் யதார்த்தத்தில் பயணிப்பதா..?

பிரதமரின் ஒலுவில் வருகை தொடர்பான விமர்சனங்கள்  சமூக வலைத்தளங்களை ஆட்கொண்டிருந்தன. இவ்வாறான சிறிய அரசியல் சித்து விளையாட்டுக்களை கூட  முஸ்லிம் சமூகம் அறிந்துகொள்ள இயலாத மடமைச் சமூகமல்ல. பிரதமரை மு.கவினரே அழைத்து வந்திருந்தமையால், பிரதமரின் இச் செயல் மு.காவினருக்கு பலத்த அவமானத்தை ஏற்படுத்தியிருந்தது. அவமானத்தை குறைத்துக்கொள்ள மு.காவை சேர்ந்த சிலர், அதனை நியாயப்படுத்திக் கொண்டிருக்கையில், பிரதி அமைச்சர் ஹரீஸ்  பகிரங்கமாகவே, பிரதமர் ரணிலை விமர்சித்து ஊடகளுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.  அதனை இனி யாரால் நியாயப்படுத்த முடியும்? இன்று முஸ்லிம் அரசியல் வாதிகள் பலர் தமிழ் ஊடகங்களில் அரசியல் செய்வதை போலல்லாது, பாராளுமன்றத்திலும் அதே கருத்தை அச்சொட்டாய் தைரியமாய் எடுத்துரைத்திருந்தார். அவரது இச் செயல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால், நடுநிலையாளர்கள் பலரதும் நன் மதிப்பை தன் பக்கம் ஈர்க்க காரணமாக அமைந்திருந்தது. இது அமைச்சர் ஹக்கீமுக்கு உசிதமானதல்ல.

இவர் தனது தலைமைத்துவத்துக்கு சவாலாக வருவார் என்ற விடயத்தில் மாத்திரமல்லாது, இது அமைச்சர் ஹக்கீமுக்கு பல வகையான தலையிடியை வழங்கியிருக்கும். மு.காவினரின் அரசியல் வாழ்வை, ஐ.தே.கவினூடாக கொண்டு செல்ல திட்டமிட்டுள்ள அமைச்சர் ஹக்கீமுக்கு, பிரதமரை இகழ்வது பல வகையிலும் பாதகமானது. மக்களிடம் ஐ.தே.கவின் செல்வாக்கு குறையும்.  அது மு.காவின் அரசியல் வாழ்வை கடுமையாக பாதிக்கும். பிரதமரிடம் மு.கா நன் மதிப்பை இழக்கும். பிரதி அமைச்சர் ஹரீஸின் கூற்று யாருக்கு? எப்படியோ? சமூகத்துக்கு அவசியமானது. இக் காலத்தில், இவ்வாறான வெளிப்படை பேச்சுக்களே அவசியமானவை. இவைகள் அனைத்தையும்  எதிர்கொள்ள ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முயற்சித்தல் போதுமாகும்.

எப்படி என கேட்கின்றீர்களா? இந்நேரம் அமைச்சர் ஹக்கீம் பிரதமரிடம் ஓடிச் சென்று, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முயற்சித்தேன், எதிர்ப்பு கிளம்பிவிட்டது என்பார். சிறிது தாமதியுங்கள், நேரம் வரும் போது தலையில் தட்டுகிறேன் என்று கூறியிருப்பார். வேறு வழி இல்லை, பிரதமரும் அமைச்சர் ஹக்கீமின் விசுவாசத்தை நம்பியே ஆக வேண்டும். உறுதி செய்தாலும் விடயம் உண்மையல்லவா? இவ்விடயத்தில் பிரதி அமைச்சர் ஹரீசின் முடியையும், யாராலும் அசைக்க முடியாது போனாலும், இதன் பிறகு பிரதி அமைச்சர் ஹரீஸ் சற்று சிந்தித்தே உரையாற்றுவார். மூளையை போட்டாலே பேச்சின் காரம் குறைந்துவிடும். இருந்தாலும் பிரதி அமைச்சர் ஹரீசுக்கு கட்சியில் உள்ள  மதிப்பை, இன்று அமைச்சர் ஹக்கீம் அறிந்திருப்பார். இதன் பிறகு பிரதி அமைச்சர் ஹரீஸ் வாள் வீச்சுக்கு தயாராகியேயாக வேண்டும். ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அதோடு முற்றுப்பெற்றிருக்கும். பிரதி அமைச்சர் ஹரீசுக்கு எதிரான பலமான வெட்டை இனித்தான் எதிர்பார்க்கலாம்.

இந்த ஒழுக்காற்று நடவடிக்கைக்கான கதை, மு.காவின் செயலாளர் உட்பட சில முக்கிய நபர்களாலேயே முன் மொழியப்பட்டிருந்தது. அன்று இக் கதை எழுந்தவுடனேயே தட்டிப் பணித்திருக்கலாம். விவாதத்துக்கு விட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. முஸ்லிம் காங்கிரசில் அவ்வளவு ஞனநாயகம் நிலவுகிறதா? இப்படியான ஒரு ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான கதையை, அமைச்சர் ஹக்கீமுக்கு முன் கூட்டியே தெரிவிக்காமல், இவர்கள் கொண்டு வந்திருப்பார்கள் என நினைக்கின்றீர்களா? இது என்ன சாதாரண விடயமா? அப்படியானால், இது எவ்வாறான பின் புலம் கொண்டது என்பதை சற்று சிந்தித்தாலும் அறிந்து கொள்ளலாம்.

( ஹபீல் எம். சுஹைர் )