மனிதனின் மூன்று பருவங்களில் முதுமைப் பருவமும் ஒன்று. இது ஒரு அற்புதமான பருவம். வயதில் நன்கு முதிர்ச்சியடைந்தவர்களை ‘பழுத்தபழம்’ என்பார்கள். அது உண்மையிலேயே மிகச்சரியான சொல் தான். ஒரு குழந்தையைப் போல இவர்கள் நடந்துகொண்டாலும் இவர் களுடன் முதிர்ந்த அனுபவமும் இணைந்திருக்கிறது என்பதை பல நேரங்களில் நாம் கவனிக்கத் தவறி விடுகிறோம்.
ஆதிகாலத்தில் இருந்தே மூத்த குடிமக்களுக்கு தனிச்சிறப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதை திருக்குர்ஆன் வசனங்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றது:
“அதற்கவர்கள் (யூசுபை நோக்கி, எகிப்தின் அதிபதியாகிய) ‘அஜீஸே! (அவரைப் பற்றி கவலைப்படக்கூடிய) முதிர்ந்த வயதுடைய தந்தை அவருக்கு உண்டு. (நீங்கள் அவரைப் பிடித்துக் கொண்டால் இத்துக்கத்தால் அவர் இறந்துவிடுவார்.) ஆகவே, அவருக்குப் பதிலாக எங்களில் ஒருவரை நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக நாம் உங்களைப் பெரும் உபகாரிகளில் ஒருவராகவே காண்கிறோம்’ என்று கூறினார்கள்”. (12:78)
கன்ஆன் (கானான்) தேசத்தில் கடும் பஞ்சம் நிலவியபோது, உணவு தானியங்களைப் பெற்று வருவதற்காக எகிப்து நாட்டுக்கு யாகூப் நபியின் பிள்ளைகள் வந்தார்கள். வந்த இடத்தில் உணவுத்துறை அமைச்சரான யூசுப் நபி, தன் தம்பியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டு காணாமல் போன ஒரு குவளை வழக்கில் புன்யாமீன் (என்ற பெஞ்சமின்) மாட்டிக்கொண்டபோது நடந்த உரையாடல்தான் அது.
இங்கு ‘வயது முதிர்ந்த எங்களது அன்புத் தந்தைக்காக அவரை விட்டு விடுங்கள்’ என்று அவர்கள் கெஞ்சுவதும் கதறுவதும், வயதான முதியோர்களை அவர்கள் முற்றிலும் மதிக் கிறார்கள் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
இனிமையான இன்னொரு நிகழ்வும் இங்கு இணைத்துப் பார்க்கத்தக்கது.
“(எகிப்திலிருந்து சென்ற மூசா நபி) மத்யன் நகரத்தி(ன் வெளியி)லிருந்த ஒரு கிணற்றின் சமீபமாக வந்த பொழுது ஒரு கூட்டத்தினர் (தங்கள் ஆடு, மாடுகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பதையும், அதற்கருகில் இருபெண்கள் (தங்கள் ஆட்டு மந்தையை) வளைத்து(த் தடுத்து நிறுத்தி)க் கொண்டிருப்பதையும் கண்டு (அப்பெண்களை நோக்கி) ‘உங்கள் விஷயமென்ன? (எதற்காக நீங்கள் தயங்கி நிற்கிறீர்கள்?’) என்று கேட்டார். அதற்கு அவ்விரு பெண்களும் ‘இம்மேய்ப்பர்கள் (தங்கள் கால்நடைகளுக்கு தண்ணீர் புகட்டிக் கொண்டு இங்கிருந்து) விலகும் வரையில் நாங்கள் (எங்கள் ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது. எங்கள் தந்தையோ மிகவும் வயதான கிழவர். (அவர் இங்கு வரமுடியாததால் நாங்களே இவைகளை ஓட்டிக் கொண்டு வந்திருக்கிறோம்)” என்றார்கள். (28:23)
எகிப்து தேசத்தில் கொடுங்கோல் ஆட்சி புரிந்த அரசன் பிர்அவ்னின் கொடுமைகளை தாங்க முடியாமல் தான் மூசா நபி மத்யன் நகர் நோக்கி நகர்ந்தார். அவர் அங்கு வந்தபோது நடந்த உரையாடல் தான் இது.
இதில் ‘எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்’ என்று அவரது பெண் மக்கள் இருவரும் தயங்கித்தயங்கி கூறுவது கவனிக்கத்தக்கது.
இதனால் தான் வயது முதிர்ந்த தமது பெற்றோர்களை ‘ச்சீ’ என்று கூட ஏளனப் படுத்திக் கூறாதீர்கள் என்று திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது:
“(நபியே) உங்களது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்கூடாதென்று (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும் படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். உங்களுடன் வாழும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை விரட்டவும் வேண்டாம்; அவர்களை (வெறுத்து) ‘ச்சீ’ என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறினாலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங்கள்”. (17:23)
வயோதிக காலம் என்பது நம்மில் பலரும் நினைப்பது போல் அது ஒரு வாழக்கூடாத காலமல்ல, வாழ்ந்துகாட்ட வேண்டிய காலம். அது ஒரு வேதனைக் காலமல்ல, சாதனைகள் பல படைத்துக் காட்ட வேண்டிய ஒரு பக்குவமான காலம். ஆக மொத்தத்தில் இது ஒரு அற்பமான காலமல்ல, இது ஒரு அற்புதமான காலம். திருக்குர்ஆன் வசனம் ஒன்று இப்ராகிம் நபியின் வயோதிகக் காலத்தைப்பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறது:
“எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கு உரியது; அவன்தான் இவ்வயோதிக (கால)த்தில் இஸ்மாயிலையும் இஸ்ஹாக்கையும் எனக்கு(ச் சந்ததிகளாக) அளித்தான். நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனைகளை (கருணையுடன்) செவியுறுபவனாக இருக்கிறான். (14:39)
இப்ராகிம் நபி எண்பது வயதைக் கடந்த பின்னரே இஸ்மாயில் மற்றும் இஸ்ஹாக் என இரண்டு பிள்ளைச் செல்வங்களை ஹாஜரா, சாரா என்ற இரண்டு மனைவியரின் வழியாகப் பெற்றெடுக்கும் பேற்றைப் பெற்றார்கள். மேலும், ‘எப்போது கேட்டாலும் அவர்களது பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்’ என்ற சிறப்பு அந்தஸ்த் தையும் தங்களது வயோதிகத்தின் மூலம் பெற்றார்கள் என்பதையும் அறிய முடி கிறது.
முதுமைப்பருவம் என்பது நாம் நினைப்பது போல் சாதாரணமான பருவமல்ல. அது, நற்செயல்களுக்கு ஏற்ற பருவம் என்றுரைக்கிறது திருக்குர்ஆன். குறிப்பாக ‘துஆ’ எனும் பிரார்த்தனைகளுக்கு உரிய முக்கியமான காலம் அது. நமது இறைவனிடம் நமது இறைஞ்சுதல்களை, கோரிக்கைகளை, வேண்டுதல்களை தனக்காகவும், பிறருக்காகவும் வைக்கவேண்டிய நேரமிது.
நபிகள் நாயகம் கூறினார்கள்: ‘எந்தவொரு வாலிபர் முதிர்ந்த வயதுடையவரை கண்ணியப்படுத்துகிறாரோ, அவர் முதியவராக ஆகும் போது நிச்சயமாக அவரை கண்ணியப்படுத்தும் விதமாக இன்னொருவரை ஏற்படுத்தாமல் அவரை இறைவன் மரணிக்கச் செய்வதில்லை’. (நூல்: மிஷ்காத்)
‘எவர் சிறுவர்களுக்கு கருணை காட்டவில்லையோ, மேலும் வயது முதிர்ந்தவர்களை கண்ணியப்படுத்தவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல’. (நூல்: மிஷ்காத்)
இவ்விரு நபிமொழிகளும் முதியோர்கள் எந்த அளவுக்கு மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை மிகத்துல்லியமாய் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. எனவே இனியேனும் நம்மைச்சுற்றி வாழும் முதியோர்களை நன்முறையில் மதித்து, நற்பேறுகள் பலதும் பெற்று பெருவாழ்வு வாழ்வோமாக.