பொலிஸார் தமது கடமைகளை நிறைவேற்றவில்லை என்பது தவறான கருத்து – நாடாளுமன்றில் பிரதமர்

FILE IMAGE
கண்டி – தெல்தெனிய பிரதேசத்தில் தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் கூட தப்பிக்கவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
 நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,இந்த சம்பவத்தில் நால்வர் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலும், முஸ்லிம் இளைஞர்கள் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
 
 இதேபோன்று அம்பாறை மாவட்டத்திலும் அண்மைக்காலங்களில் சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளன.நேற்று கண்டி சம்பவத்தில் முஸ்லிம் இளைஞரொருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 ஆகவே இவை முஸ்லிம் மக்களை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற விடயம் தெளிவாகியுள்ளது.இது தொடர்பில் உரிய விசாரணைகள் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இது சிங்கள நாடு என்ற வகையில் சிங்களவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். அதேவேளை இலங்கையில் ஏனைய மதத்தவர்களும் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் மத உரிமை உள்ளது.
 எனினும் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு கவலை தெரிவிப்பதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் பொலிஸார் தமது கடமைகளை நிறைவேற்றவில்லை என்பது தவறான கருத்து. ஒவ்வொரு பொலிஸாரும் மிகவும் பொறுப்புடனேயே தமது கடமைகளை முன்னெடுத்திருந்தார்கள்.அத்துடன் இந்த சம்பவத்திற்கு காரணம் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களாலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.