இந்திய கிரிக்கெட் அணி முன்னணி வீரான யுவராஜ்சிங் அணியில் மீண்டும் இடம் பிடிக்க போராடி வருகிறார்.
கடைசியாக அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடினார். அதன்பின் கழற்றி விடப்பட்ட யுவராஜ்சிங்கை தேர்வு குழுவினர் கண்டு கொள்ளவில்லை. ஆனாலும் அணிக்கு தேர்வாக கடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
ஏப்ரல் மாதம் நடக்கும் ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற இலக்கு வைத்துள்ளார். இதுகுறித்து யுவராஜ் சிங் கூறியதாவது:-
ஐ.பி.எல். போட்டி தொடரை ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறேன். இது எனக்கு மிகவும் முக்கியமானது. 2019-ம் ஆண்டு வரை விளையாட விரும்புகிறேன். அதன் பிறகு ஓய்வு குறித்து முடிவு எடுப்பேன். தென்ஆப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. டெஸ்ட் தொடரை இழந்த பிறகும் இந்திய வீரர்கள் போராட்ட குணத்தை வெளிப்படுத்தினர். கடுமையாக போராடியே டெஸ்ட் தொடரை இழந்தது. கேப்டனாக விராட்கோலி அதிக ரன் குவித்து சிறப்பாக வழிநடத்தினார்.
வெளிநாட்டு மண்ணில் 3 தொடர்களில் இரண்டை வென்று இருப்பது இந்திய அணியின் ஆதிக்கத்தை காட்டுகிறது. வெளிநாட்டில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று நம்பிக்கை கொள்வதற்கு இது நல்ல தொடக்கமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.