ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தேடப்படும் முக்கிய குற்றவாளிகளின் பெயர்ப்பட்டியலில் இன்று இணைக்கப்பட்டுள்ளார்.கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பதிவுசெய்யப்பட்ட குற்றவாளிகள் பிரிவின் ஏற்பாட்டில் உதயங்கவின் பெயர் சர்வதேச குற்றவாளிகள் பெயர்ப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
உதயங்கவின் புகைப்படங்கள் மற்றும் அவர் பயன்படுத்தும் பெயர் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் அவரைப் பற்றிய தகவல்களில் இணைக்கப்பட்டுள்ளது.இதன் பிரகாரம் இனிமேல் அவரால் எந்தவொரு நாட்டுக்குள்ளும் நுழையவோ அல்லது தங்கியிருக்கும் நாட்டில் இருந்து வௌியேறவோ முடியாது. அவ்வாறு முயலும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நாட்டின் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்.
சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்கள், கள்ளச்சந்தை ஆயுத வியாபாரிகள் போன்றோரே இந்தப் பெயர்ப்பட்டியலில் அதிகமாக இடம்பிடித்துள்ளார்கள்.இலங்கையின் சார்பில் சர்வதேச குற்றவாளிகள் பெயர்ப்பட்டியலுக்கு 300 பேரின் பெயர்கள் உள்நுழைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் முக்கிய குற்றவாளியாக உதயங்க வீரதுங்க அறிவிக்கப்பட்டுள்ளார்.