உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய உறுப்பினர்களின் பெயர் விபரம் எதிர்வரும் சனிக்கிழமை வர்த்தமானி மூலம் வெளியிட திட்டம்

 

340 உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 8,689 உறுப்பினர்களின் பெயர் விபரம் எதிர்வரும் சனிக்கிழமை வர்த்தமானி மூலம் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது.

உரிய உள்ளூராட்சி மன்றங்களுக்கு நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றி கட்சியின் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் ஆணைக்குழுவில் சமர்ப்பிப்பது அவசியமாகும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

50 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்ற கட்சிக்கு உரிய உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர் அல்லது உப தலைவர் பதவிக்கான உறுப்பினர்களை முன்மொழியலாம். எதிர்வரும் ஞாயிறு அல்லது திங்கட்கிழமை இந்த நடவடிக்கை இடம்பெறுவது அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் மூலமும், விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மேலதிகமாக மேலும் 364 பேர் முன்மொழியப்பட வேண்டும். உள்ளூராட்சி மன்றங்களுக்கு 5,075 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, இதில் 535 பேர் பெண்களாவர்.

இது வேட்பாளர்களின் எண்ணிக்கையில் பத்து சதவீதமாகும். எஞ்சிய 15 சதவீதமானோர் பெண் பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்படவிருக்கிறார்கள். இதற்கமைய, 1,300 பெண் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவிருக்கிறார்கள்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய உறுப்பினர்களின் பதவிக்காலம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிறது.