மாகாண எல்லை மீள்நிர்ணயத்திலும் முஸ்லிம்கள் ஏமாறப் போகிறார்களா?
கோட், சூட் பற்றிய கனவில் மிதந்து கொண்டிருக்கும் போது கட்டியிருக்கின்ற கோவணத்தையும் களவு கொடுக்கின்ற நிலையிலேயே இலங்கை முஸ்லிம்கள் இருந்து கொண்டிருக்கின்றனர். பறப்பதற்கு சிறகுகள் தருவதாக ஆசைகாட்டி, வாக்குகளைப் பெற்றுவிட்டு, இருக்கின்ற கால்களையும் முடமாக்கி விடுகின்ற வேலையைத்தான் பெருந்தேசிய அரசியல் செய்து கொண்டிருக்கின்றது.
இந்த பறிகொடுத்தல்களில் இன்னுமொரு அத்தியாயமாகவே, மாகாண சபைகளுக்கான எல்லை மீள்நிர்ணயம் அமைந்து விடுமோ என்ற நியாயமான சந்தேகம் இப்போது எழுந்திருக்கின்றது.
2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு முன்னதாக மாகாணங்களின் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழு குறித்தொதுக்கப்பட்ட 4 மாதங்களில் கடந்த 19ஆம் திகதி உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் தமது இறுதி சிபாரிசு அறிக்கையை கையளித்திருக்கின்றது.
இந்த அறிக்கை இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்பதுடன், இந்த அறிக்கையின் உள்ளடக்கங்கள் ஒரு சட்டமூலமாக பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது. இதில் அதிகமான திருத்தங்கள், முரண்பாடுகள் ஏற்படுவதை தடுப்பதற்காக பாராளுமன்றத்திற்கு கொண்டுசெல்ல முன்னர் ஒரு சர்வகட்சி மாநாட்டை கூட்டி இதன் உள்ளடக்கங்கள் குறித்து பேசுவதற்கு அமைச்சர் பைசர் முஸ்தபா தீர்மானித்திருக்கின்றார். அதன் பின்னர் வர்த்தமானி வெளியிடப்பட்டு பாராளுமன்றத்திற்கு நகர்த்தப்படும் என்கிறார்கள்.
குறுகிய காலக்கெடு
ஆனால், இவையெல்லாம் குறுகிய காலப்பகுதிக்குள் நடந்தேறும் என்றே அனுமானிக்க முடிகின்றது. அரசாங்கம் ஆரம்பத்திலிருந்தே மாகாண சபைத் தேர்தலை எப்படியாவது பிற்போடுவதற்கே முயற்சித்து வருகின்றது. உள்;ளுராட்சித் தேர்தலில் பொதுஜன பெரமுணவின் கை ஓங்கியுள்ள நிலையில் மாகாண சபை தேர்தலையும் நடாத்தி இன்னும் நெருக்கடிக்குள் விழுவதற்கு அரசாங்கம் விரும்பாதுதான்.
இருந்தபோதும், ‘கபே’ போன்ற தேர்தல் கண்காணிப்பாளர்கள் மாகாண சபை தேர்தலை நடத்துமாறு ஏற்கனவே அழுத்தம் கொடுக்கத் தொடங்கி விட்டனர். ஆட்சியில் கட்டமைப்பு ரீதியான மாற்றமொன்றை கொண்டுவர முடியாது போனால் கூட்டு எதிரணியும் இவ்விதமான அழுத்தத்தை பிரயோகிக்கும். எல்லை மீள்நிர்ணயப் பணிகள் முடிவடைந்து விட்டமையால் வேறு எக்காரணம் கொண்டும் தேர்தலை பிற்போட முடியாத ஒரு இக்கட்டான நிலை வரும்போது அரசாங்கம் மாகாண சபை தேர்தலை நடத்தும்.
எனவே முஸ்லிம்கள் மாகாண சபை தேர்தல் முறைமை மற்றும் எல்லை மீள்நிர்ணயம் பற்றி அவசரமாக மிக மிக கவனம் செலுத்த வேண்டிய கட்டத்தில் இருக்கின்றோம். வட்டாரமும் தொகுதியும் கலந்த 60இற்கு 40 என்ற அடிப்படையிலான உள்ளுராட்சி மன்ற தேர்தல் தந்திருக்கின்ற அனுபவமும் பாடம் இதற்குப் போதுமானதாகும். இதனையொத்த ஒரு தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தலும் நடைபெற்றால் எவ்வாறான சிக்கல்கள் ஏற்படும் என்பதை புத்திசாலித்தனமான ஒரு சமூகத்தால் மிக இலகுவாகவே உணர்ந்து கொள்ளவும் முடியும்.
பொதுவாக நாடெங்கிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்திலும் உள்ளுராட்சி சபைகளில் எந்தக் கட்சி அல்லது எவ்விரு கட்சிகள் சேர்ந்து ஆட்சியமைக்கப் போகின்றன என்பது பற்றியே முழுநேரமும் முஸ்லிம்கள் தலையைப் போட்டு பிய்த்துக் கொள்கின்றனர். இவ்வாறு உள்ளுராட்சி தேர்தலுக்குப் பின்னரான அரசியல் தளம்பலுக்குள் முஸ்லிம்கள் மூழ்கியுள்ள நிலையில் முஸ்லிம்களுக்கு சாதகமில்லாத ஒரு எல்லை மீள்நிர்ணயம் நகர்த்தப்படலாம் என்றும் எண்ணத் தோன்றுகின்றது.
ஆதலால், ‘பின்னுக்கு பிலாப்பழம் இருக்கின்றது’ என்ற அடிப்படையில், முஸ்லிம் அரசியல்வாதிகளும் மக்களும் இந்த உள்ளுராட்சி மன்ற குழப்பங்களுக்குள் இருந்து வெளியில் வந்து, மாகாண சபை தேர்தல் விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது.
புதிய தொகுதிகள்
மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதாயின் அவற்றின் எல்லைகளை வரையறை செய்ய வேண்டும். அதாவது மாகாண சபைகளுக்குள் அடங்குகின்ற தேர்தல் தொகுதிகள் மற்றும் தேர்தல் மாவட்டங்களின் எல்லைகள் மீள்வரையறை செய்யப்பட்டு அவை வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு, சட்டவாக்கச் செயன்முறைக்கு உட்படுத்துவது நியதி. அந்த அடிப்படையிலேயே எல்லை மீள்நிர்ணய குழு தமது அறிக்கையை அமைச்சருக்கு கையளித்திருக்கின்றது. இவ்வறிக்கை உரிய காலத்தில் கிடைத்தமை அமைச்சருக்கோ அரசாங்கத்திற்கோ மகிழ்ச்சி தருவதாக அமையலாம். ஆனால் முஸ்லிம்கள் அதிலுள்ள உள்ளடக்கங்கள் தெரியாமல் ஆறுதலடைய முடியாது.
5 பேர் கொண்ட இந்த எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கு கலாநிதி. கே. நவலிங்கம் தலைமை தாங்குவதுடன், பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த இருவரும் தலைவருக்கு மேலதிகமாக தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இன்னுமொருவரும் முஸ்லிம்கள் சார்பாக பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வும்; அங்கம் வகிக்கின்றனர். இந்த அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வில் பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் பலவற்றில் ஹஸ்புல்லா முகம் தெரியாதவாறு பின்பக்கமாகவே நிற்கின்றார் என்பது உன்னிப்பாக நோக்குவோருக்கு தற்செயலாக ஒரு மறைமுக செய்தியை சொல்லாமல் சொல்வதாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். விசாரித்துப் பார்த்ததில் பல திடுக்கிடும் சங்கதிகள் கசிந்துள்ளன.
இன ரீதியாக சிந்திப்பதை விடுத்து இனங்களை கடந்து பொதுவாக சிந்திக்க வேண்டுமென்று நாம்; பேசிக் கொண்டாலும் நடைமுறை யதார்த்தம் அப்படியில்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது. இனரீதியான அரசியலையே மூன்று சமூகங்களும் செய்து கொண்டிருக்கின்றன. எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழுவிலும் மூன்று சமூகங்களையும் சேர்ந்த துறைசார் நிபுணர்கள் உள்வாங்கப்பட்டமை அந்தந்த சமூகங்களின் அபிலாஷைகளை உறுதிப்படுத்தவும், அவர்களது சமூகங்களுக்கு அநியாயம் இழைக்கப்படாமல் பாதுகாப்பதற்காகவும் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் முஸ்லிம்களின் அபிலாஷைகள் முழுமையாக உள்வாங்கப்படவில்லை என்பது இப்போது தெரியவந்துள்ளது.
முஸ்லிம்களின் சனத்தொகை பரம்பல், அரசியல் முக்கியத்துவம், இதற்கு முன்பிருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை என்பவற்றைக் கருத்திற் கொண்டு ஓரளவுக்கேனும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டிய தார்மீகக் கடமை எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழுவிற்கு இருந்தது. இன்னும் அந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்படவில்லை என்பதுடன் சட்டவலுப் பெறவும் இல்லை என்றாலும், தற்போது கசிந்துள்ள நம்பகரமான தகவல்களின் படி பார்த்தால் மேற்சொன்ன விதத்தில் இவ்வறிக்கை முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவில்லை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.
கலப்பு தேர்தல் முறை
இந்த விடயத்தை விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் முதலில் இந்த தொகுதி, மாவட்ட, மாகாண எல்லை மீள்வரையறை பற்றி முஸ்லிம்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு முன்னர் வட்டார எல்லைகளும் வட்டாரங்களை உள்ளடக்கிய உள்ளுராட்சி மன்ற எல்லைகளும் மீள்வரையறை செய்யப்பட்டு உறுப்பினர்களின் எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் முஸ்லிம்களுக்கு பல பாதகங்கள் இழைக்கப்பட்டன. ஆனால், இதனை சுட்டிக்காட்டிய முஸ்லிம் காங்கிரஸூம் மக்கள் காங்கிரஸூம், உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்டத்திற்கு வாக்களிக்காமல் விடவில்லை.
இதுபோலவே, இப்போது மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்காக மாகாணங்களின் கீழுள்ள தொகுதிகளின் எல்லை, தேர்தல் மாவட்டங்களின் எல்லை என்பவற்றை மீள்நிர்ணயம் செய்யும் பணிகளே முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனவே, நடைமுறை யதார்த்தத்தின்படி ஒரு தொகுதியில் எந்த சமூகம் பெரும்பான்மையாக வாழ்கின்றதோ அந்த சமூகத்திற்கு மட்டுமே மாகாண சபை உறுப்புரிமை கிடைக்க வாய்ப்புள்ளது. மற்றைய சமூகத்திற்கும் அவ்வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால் அது இரட்டை அங்கத்தவர் தொகுதியாக ஆக்கப்பட வேண்டும்.
எனவே இது விடயத்தில் சிங்கள தேசியமும் தமிழ் தேசியமும் சாதுர்யமாக காய் நகர்த்தியிருக்கும் என்றே கருத முடிகின்றது. ஆனால், பேராசிரியர் ஹஸ்புல்லாவினால் முன்மொழியப்பட்ட முஸ்லிம்கள் சார்பான பல விடயங்கள் ஒட்டுமொத்த குழுவினதும் ஏக யோசனையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று அறிய முடிகின்றது. குறிப்பாக, 20 இற்கு மேற்பட்ட முஸ்லிம் பெரும்பான்மை தொகுதிகளை உருவாக்கக் கூடிய நியாயங்கள் இருந்த போதும், 15 இற்கும் குறைவான முஸ்லிம் பெரும்பான்மை தொகுதிகளையே இக்குழு சிபாரிசு செய்துள்ளதாக தெரிய வருகின்றது. இது விடயத்தில் ஹஸ்புல்லாவின் முயற்சிகளை குழு அங்கீகரிக்கவில்லை என்பதும் அவருக்கு உரிய கௌரவம் அளிக்கப்படவில்லை என்பதும் சமூக வலைத்தளங்களில் இப்போது பேசு பொருளாகி இருக்கின்றது.
இதுவரை காலமும் அமுலில் இருந்த விகிதாசார தேர்தல் முறைமை திருப்திப்படும் விதத்தில் முஸ்லிம்களி;ன் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தியிருந்தது. அதிகமான முஸ்லிம் எம்.பி.க்களும் மாகாண சபை உறுப்பினர்களும் இருந்தும் எதனையும் சாதிக்க முடியாவிட்டாலும் அதிகாரப் பலம் ஒன்று இருந்ததை மறுப்பதற்கில்லை. அது கலப்பு தேர்தல் முறைமையின் ஊடாக சிதைக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தலிலும் வடக்கு, கிழக்கிற்கு வெளியே ஆங்காங்கே இவ்விதமான பாதிப்பு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இந்நிலையில் அதே கலப்பு முறையிலேயே மாகாண சபை தேர்தலும் நடைபெறப் போகின்றது. அதாவது 50இற்கு 50 என்ற அடிப்படையில் உறுப்பினர் தெரிவுச் சூத்திரம் அமைந்திருக்கும். 50 வீதமான உறுப்பினர்கள் தொகுதிகளில் இருந்தும் 50 வீதமனோர் விகிதாசாரப் பட்டியலில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவர். எனவே ஒரு தொகுதியில் எந்த சமூகத்தின் வாக்குகள் அதிகமாக காணப்படுகின்றதோ அந்த சமூகத்தின் பிரதிநிதியே தெரிவாக வாய்ப்புண்டு. அங்கு சிறுதொகையில் வாழும் மக்கள் விகிதாசாரப் பட்டியலின் அதிர்ஷடத்தையே நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஹஸ்புல்லாவின் முயற்சி
முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல சில இடங்களில் தமிழர்களுக்கும் இப்பிரச்சினை ஏற்படலாம். ஆனால் தமிழ் அரசியல்வாதிகள், சிவில் அமைப்புக்கள் ஏனைய விடயங்களைப் போலவே இவ்விடயத்தையும் மிகக் கவனமாக கையாண்டிருப்பதாகவே தெரிகின்றது. நாட்டில் பெரும்பாலான இடங்களில் பெரும்பான்மையாக வாழ்கின்ற சிங்கள மக்களுக்கு அதிகமான தொகுதிகள் வருகின்ற போது உறுப்பினர்கள் குறைவதற்கும் சாத்தியமில்லை. எனவே இப்புதிய எல்லை மீள் நிர்ணயத்தால் யாருக்காவது அதிக பாதிப்பு ஏற்படுமாக இருந்தால் அது முஸ்லிம்களுக்காகவே இருக்கும்.
இந்நிலைமை ஏற்படுவதை தடுப்பது என்றால் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசங்களை இணைத்து புதிய தொகுதிகள் வரையறை செய்யப்படுவதுடன், இரு சமூகங்கள் வாழ்கின்ற தொகுதிகளில் இரட்டை அங்கத்தவர் முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இதுபோல இன்னும் எத்தனையோ பரிந்துரைகளையும் முன்வைக்கலாம். அவற்றையெல்லாம் செய்வதற்கு பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் முயற்சி செய்திருக்கின்றார். ஆனால் சட்ட வரையறையும் ஏனைய உறுப்பினர்கள் இணக்கம் காணாமையும் சிலரின் அதிமேதாவித்தனமும், முஸ்லிம்களின் அபிலாஷைகளை உறுதி செய்ய தடையாக அமைந்துள்ளதாக ஹஸ்புல்லாவுக்கு நெருக்கமாக பணியாற்றியவர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறிருப்பினும், தனது இயலுமைக்கும் அதிகாரத்திற்கும் உட்பட்ட விதத்தில் மிகவும் அர்ப்பணிப்புடனும் பொறுமையுடனும் இருந்து முன்மொழிவுகளை அவர் சமர்ப்பித்திருக்கின்றார். அதுமட்டுமன்றி, குழுவின் உறுப்பினர்கள் உடன்படாத சிபாரிசுகளை உள்ளடக்கிய பிறிதொரு பின்னிணைப்பு அறிக்கையையும் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் சமர்ப்பித்திருக்கின்றார் என்று அறிய முடிகின்றது. ஆக, அவர் தன்னால் முடியுமானதை செய்திருக்கின்றார். இப்போது முஸ்லிம் கட்சித் தலைவர்களும், அரசியல் தளபதிகளும் மக்களும் என்ன செய்யப் போகின்றார்கள் என்பதே நம்முன்னுள்ள கேள்வி.
புதிய எல்லை நிர்ணயம் சட்டமாகும் பட்சத்தில் அது முஸ்லிம்களுக்கு மிகவும் பாதிப்பாக அமையும் என்று பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் கூறுகின்றார். இவ்விடயத்தில் மட்டுமன்றி எல்லா நடப்பு விவகாரங்களிலும் முஸ்லிம்களின் நிலை இவ்வாறுதான் இருக்கின்றது என்றும் அவர் போன்றவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
அரசியல்வாதிகளின் பொறுப்பு
அந்தவகையில், இந்த எல்லை மீள்நிர்ணய அறிக்கைக்கு சட்டவலு கிடைத்து அது நடைமுறைப்படுத்தப்பட்டால் வடக்கில் முஸ்லிம் மாகாண சபை பிரதிநிதி ஒருவரை பெறுவது இயலாத காரியமாக இருக்கும். தென்னிலங்கையில் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்படும். கிழக்கில் ஓரளவுக்கு மாகாண சபை உறுப்புரிமையை முஸ்லிம்களால் உறுதிப்படுத்த முடியுமாக இருக்கும் என்றாலும் வேறுவிதமான நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று, எல்லை மீள்நிர்ணய குழுவின் முஸ்லிம் அங்கத்தவரான ஹஸ்புல்லாஹ் கூறுகின்றார். எனவே நாடெங்கும் 15 இற்கும் குறைவான முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்களே தெரிவாவதுடன், வேறு பிரச்சினைகளும் தோற்றம் பெறலாம்.
எனவே, நாம் அனைவரும் இது விடயத்தில் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டியுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களில் தனித்து ஆட்சியமைக்க முடியாத ஒரு சூழலில், மாகாண சபைகளில் முஸ்லிம்களின் உறுப்புரிமை குறைவது என்பது சாதாரண விடயமல்ல. முஸ்லிம்களுக்கு பெயரளவிலேனும் இருக்கின்ற அரசியல் பலத்தை நசுக்கி, ஒரு எழுதப்படாத அடிமைச் சமூகமாக மாற்றுவதற்கு அது வழிவகுக்கும் என்பதை கனவிலும் மறந்து விடக் கூடாது.
புதிய தேர்தல் முறைமையை மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம் விமர்சிக்கின்ற பாங்கில் பேசினாலும், மாகாண சபை தேர்தல் முறைமையை மாற்ற வேண்டும் என்று மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் கூறினாலும், மாகாண சபை முறைமையையே முற்றாக மாற்ற வேண்டும் என்று தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா சொன்னாலும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் போது இவர்கள் எல்லோரும் முஸ்லிம்களுக்கு சாதகமில்லாத பல சட்டமூலங்களுக்கு ஆதரவளித்தவர்கள்தான் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த தைரியத்திலேயே பெருந்தேசிய சக்திகள் தொடர்ந்தும் முஸ்லிம்களின் தலையில் மிளகு அரைக்க முனைகின்றன.
எல்லை மீள்நிர்ணய அறிக்கை இன்னும் வரைபாக இற்றைப்படுத்தப்படவில்லை. சர்வகட்சி மாநாடு, பாராளுமன்றம் ஆகியவற்றில் கருத்தறியப்பட்டு திருத்தங்களுடனேயே நிறைவேற்றப்படும். இதனை ஏனைய சட்டமூலங்கள் போல இலகுவாக நிறைவேற்றி விட முடியாது என்றும், ‘இல்லையில்லை மூன்றிலிண்டு அறுதிப் பெரும்பான்மை இன்றியே நிறைவேற்றலாம்’ என்றும் மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அத்துடன், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாவிட்டால் பிரதமர் தலைமையிலான உயர்மட்ட குழுவுக்கு திருத்தத்திற்காக அனுப்பப்படும் என்றும் கூறப்படுகின்றது. எது எவ்வாறாயினும், இன்னும் இதனை திருத்துவதற்கும் முஸ்லிம்களின் அபிலாஷைகளை பிரதிவிம்பப்படுத்துவதற்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.
இனிமேல், எல்லை மீள் நிர்ணயக் குழுவினாலோ பேராசியர் ஹஸ்புல்லாவினாலோ எதுவும் செய்ய முடியாது. ஆதலால், வெறுமனே அறிக்கை விட்டுக் கொண்டிருக்காமல் இந்த எல்லை மீள்நிர்ணயத்திலும் அதன்பின்னரான சட்டவாக்க நடைமுறையிலும் தேர்தல் முறைமையிலும் மூன்று முஸ்லிம் கட்சி தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களும் காத்திரமாக செயற்பட வேண்டும். சர்வகட்சி மாநாட்டிலும் பாராளுமன்றத்திலும் இதற்காக குரல் கொடுக்க வேண்டியது தலையாய கடப்பாடாகும்.
முஸ்லிம் சமூகம், வழக்கம் போல எதனையும் பொருட்படுத்தாமல் இருந்துவிட்டு எல்லாம் நடந்து முடிந்த பிற்பாடு தலையில் அடித்துக் கொள்ளப் போகின்றோமா அல்லது இருக்கின்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எமது அபிலாஷைகளை, பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தும் விதத்தில் எல்லை மீள்நிர்ணயம் இடம்பெறுவதை உறுதிப்படுத்தப் போகின்றோமா என்பதை தீர்மானிக்க வேண்டிய தருணம் இது.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம், இனியும் வேண்டாம்!
•ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 25.02.2018)