புதிய அரசாங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்கும் தற்போதைய நிலை வெறுப்பை ஏற்படுத்துகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.உள்ளூராட்சி தேர்தலை அடுத்து கொழும்பு அரசியலில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்ற போதிலும், அவை எதிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ள விரும்பவில்லை என அவர் கூறியுள்ளார்.தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “அரசாங்கத்தை அமைப்பதற்கான பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் கலந்துகொள்வதற்கு கூட்டமைப்பு விரும்பவில்லை.என்ன நடக்கப் போகிறது என்று எமக்குத் தெளிவாகத் தெரியவில்லை.
ஆட்சி அமைக்கும் ஆற்றல் யாருக்கு இருக்கின்றது என்பதை அறிந்து கொள்வதற்கு காத்திருக்கின்றோம்.கட்சி தாவல்களை மேற்கொள்வதற்காக பல முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட நாம் விரும்பவில்லை. எமது முடிவு கொள்கையின் அடிப்படையிலானது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.