மைத்திரி – ரணில் நல்லாட்சி அரசாங்கம் உடனடியாக பதவி விலகி மக்களின் ஆணையை ஏற்றுக்கொள்ள வேண்டும்: கருணா

தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழர்களின் வாக்குபெற்றுக்கொண்டு சகோதர இனத்தினை பலப்படுத்துவதில் அக்கறையாக உள்ளது. எதிர்காலத்தில் த.தே.கூ.வுக்கு நல்லதொரு பாடம் புகட்ட வேண்டுமென முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.

தற்போது இருக்கும் மைத்திரி – ரணில் நல்லாட்சி அரசாங்கம் உடனடியாக பதவி விலகி மக்களின் ஆணையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுன, அதிக உள்ளுராட்சி மன்றங்களின் ஆசனங்களை கைப்பற்றியதனை பாராட்டி இன்று கிரானில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் இளைஞர் அணியினரினால் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 அவர் தொடர்ந்து தமது கருத்தினை தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதியின் கட்சியானது அதிகளவு உள்ளுராட்சி மன்றங்களை கைப்பற்றி பாரிய வெற்றி பெறும் என்று கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பே ஊடகம் ஒன்றிக்கு நான் கருத்து தெரிவித்திருந்தேன்.

 இன்று ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறனதொரு தேர்தலில் பின்னடைவு முடிவுகள் பெற்றிருந்தால் அதிகாலையிலேயே பதவி விலகி இருப்பார்கள். 

340 உள்ளுராட்சி மன்றங்களில் 239 ஆசனங்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கட்சி கைப்பற்றியுள்ளமை பாராட்டத்தக்கது.

பிரதேச மக்கள் சரியான தீர்ப்பு வழங்கியுள்ளனர். எனது கட்சியான தமிழர் ஐக்கிய முன்னணியானது மட்டக்களப்பு மாவட்டத்தில் 7 ஆசனங்களை பெற்றுள்ளது. இது எனக்கு கிடைத்த வெற்றியாகும். எனது கட்சி ஆரம்பித்து ஒரு வருட காலமாகும். எனது கட்சி எதிர் நோக்கிய கன்னித் தேர்தல் இதுவாகும். அதை மக்கள் அங்கிகரித்துள்ளனர். அதையிட்டு பெருமைப்படுகின்றேன். எதிர்காலத்தில் சிறந்ததொரு அரசியல் காய் நகர்வை நகர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளேன். இதன் பிரகாரம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் பிரதித் தலைவர் நா.திரவியம் (ஜெயம்) என்னுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார். எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் எமது இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவதற்கு உடன்பட்டுள்ளோம்.

ஏனென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழர்களின் வாக்குபெற்றுக்கொண்டு சகோதர இனத்தினை பலப்படுத்துவதில் அக்கறையாக உள்ளனர். இவர்களுக்கு நல்லதொரு பாடம் புகட்ட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.