இதயத்தின் நலம் காப்பது மிகவும் அவசியம்…!!

உடம்பெங்கும் ரத்தத்தை அனுப்பும் மையமான இதயத்தின் நலம் காப்பது மிகவும் முக்கியம். அதற்கு நாம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்…

புகை, மதுப் பழக்கம் இருந்தால் உடனே அவற்றை  கைவிட  வேண்டும்.

உயர் ரத்த அழுத்தம் இருந்தால் அதை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோய் ஏற்படாமல் வருமுன் காக்கவும், அந்நோய் இருந்தால் அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் வேண்டும்.

உடல் எடையை சீராகப் பராமரிக்க வேண்டும். உடல் எடை அதிகமாக இருந்தால் தகுந்த உடற் பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மூலம் சரிசெய்ய வேண்டும்.

அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மருத்துவர் கூறும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

சுறுசுறுப்பான உடலுழைப்பு மற்றும் செயல்பாடு இருந்தால் ரத்த ஓட்டம் உடலில் சீராக நடைபெறும். வாரத்தில் 5 நாட்களாவது துரிதமான நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மூலம் இதயத்தின் செயல்பாட்டைத் துரிதப்படுத்தி ரத்த ஓட்டத்தின் சிறு தடைகளை நீக்கி, அதைச் சீராக்க வேண்டும்.

இதயத்துக்கு இதமான உணவு வகைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். கடல் உணவுகள், சோயா பீன்ஸ், முழு கடலை, வேர்க் கடலை போன்றவற்றையும், பச்சைக் காய்கறிகள், கீரைகளையும் அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்வது இதய ரத்தக்குழாய் மற்றும் உடலின் எல்லா உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

இவை எல்லாவற்றையும் தாண்டி, மன ஆரோக்கியம், இதய ஆரோக்கியம் காக்கும். மனதை மகிழ்ச்சியாகவும், நேர்மறை எண்ணங்களுடனும் வைத்துக்கொள்வது இதயத்துக்கு நன்மை புரியும்.