வன்னியில் இழந்த பாராளுமன்ற ஆசனத்தை பெறும்நோக்கில் முசலி பிரதேச சபையை கைப்பற்றுவோம்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

வன்னியில் இழந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், முதற்கட்டமாக முசலி பிரதேச சபையின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும். வன்னி அமைச்சருக்கு பாடம் புகட்டுவதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் என்ற சமிக்ஞைகள் தென்பட ஆரம்பித்துவிட்டன என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மன்னார் எருக்கலம்பிட்டியில் நேற்றிரவு (30) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் அடையாளம் பெற்ற வன்னி அமைச்சருக்கு, மர்ஹூம் நூர்தீன் மசூர் சிபார்சு செய்திருக்காவிட்டால், வன்னி அமைச்சருக்கு அரசியல் அந்தஸ்து கிடைத்திருக்காது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடையாளம் பெற்றிருக்காவிட்டால், அவர் இந்த நிலைமைக்கு வந்திருக்கமாட்டார். ஆனால், இன்று அவற்றையெல்லாம் மறந்து காட்டுத்தர்பார் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்.
முசலி பிரதேச சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றுவதற்கான சாதக நிலைமைகள் காணப்படுகின்றன. அராஜக அரசியல் செய்துகொண்டிருக்கும் வன்னி அமைச்சருக்கு எதிரான தீர்வை எடுப்பதற்கு மக்கள் துணிந்துவிட்டார்கள். இந்நிலையில், முசலி பிரதேச சபையை கைப்பற்றும் நோக்கில், எமது வட மாகாண சபை உறுப்பினர் றயீஸ் தானக முன்வந்து பதவியை இராஜினாமா செய்து பாரிய தியாகத்தை செய்துள்ளார். 
வௌ்ளப் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்காக 150 மில்லியன் ரூபா செலவில் நாகவில்லு, எருக்கலம்பிட்டி பிரதேசங்களில் வடிகான்களை அமைத்துள்ளோம். அதுபோல பாதை அவிருத்திக்கும் தாரளமான நிதியொதுக்கீடுகளை எனது அமைச்சின் மூலமாக செய்திருக்கிறோம். அதைவிட அதிகமான அபிவிருத்திகளை எதிர்காலங்களில் இங்கு முன்னெடுப்பதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.
எருக்கலம்பிட்டியின் கலங்கரை விளக்கமாக திகழும் பாடசாலையை புனரமைப்பதில் றயீஸின் பங்களிப்பு அளப்பரியது. மாகாண சபையில் இருந்துகொண்டு பாடசாலையின் அபிவிருத்திக்காக மிகவும் பாடுபட்டார். இப்போதும் அதே ஈடுபாட்டில் இருக்கும் அவருக்கு கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும். இந்தப் பாடசாலையை முன்னேற்றி, ஆளனிப் பற்றாக்குறை தீர்ப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தன்னாலான முழு உதவிகளையும் செய்யும்.
எருக்கலம்பிட்டி கடற்கரையில் அழகிய பூங்கா ஒன்றை நிர்மாணிப்பதற்காக 25 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளோம். பூங்கா நிர்மாணத்துக்கான ஒப்பந்தம் வட மாகாணத்துக்கு வெளியே வழங்கப்பட்டதாக எழுந்த சர்ச்சையினால் வேலைகள் தடைப்பட்டுள்ளன. இந்த நெருக்கடிகள் தீர்க்கப்பட்டு விரைவில் அவற்றை பூரணப்படுத்தி தருவோம்.
பிரதி சுகாதார அமைச்சர் பைசால் காசிம் ஊடாக நாகவில்லு வைத்தியசாலையில் புதிய கட்டிடத்தை நிறுவுவதிலும் அங்குள்ள ஆளனி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதிலும் வெற்றியடைந்திருக்கிறோம். அதேநேரம், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் ஊடாக நாகவில்லு மற்றும் எருக்கலம்பிட்டி மைதானங்களை புனரமைக்கின்ற வாய்ப்பும் எமக்கு கிட்டியிருக்கிறது.
 அரசாங்கத்தின் வீட்டுத் திட்டத்துக்கு மேலதிக வீட்டுத்திட்டத்தை நிர்மாணித்து தருமாறு எருக்கலம்பிட்டி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதற்கான முயற்சிகளை இந்த வருடத்தில் நாங்கள் ஆரம்பிக்கவுள்ளோம். இங்கு நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் இஸ்ஸதீன் ஒரு உறுப்பினராக வருகின்ற சந்தர்ப்பத்தில், அவரை முன்னிறுத்தி இந்த வேலைத்திட்டங்களை செய்துகொடுப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தயாராக இருக்கிறது.
அரச வேலைவாய்ப்புகள் வழங்குகின்றபோது, முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் புறக்கணிப்படும் குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்துவருகிறது. அதனை நிவர்த்திக்கின்ற முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். இதுதவிர, எருக்கலம்பிட்டியில் இறங்குதுறை ஒன்றை அமைத்து தருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீன்பிடித்துறை அமைச்சரை சந்தித்து அதனை செய்வதற்கான முயற்சியையும் நாங்கள் மேற்கொள்வோம் என்றார்.
இக்கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான முத்தலிபாவா பாறுக், ஹுனைஸ் பாறுக், வட மாகாணசபை உறுப்பினர் நியாஸ், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளான முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.
ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்