‘நாங்கள் இறைவனைத் தவிர வேறுஎவருக்கும் அஞ்சப்போவதில்லை’ : குருநாகலில் அமைச்சர் ரிஷாட்

 

 

ஊடகப்பிரிவு

குருநாகல் மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களைஆதரித்து, அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்உள்ளடங்கிய, கட்சியின் முக்கியஸ்தர்கள் நேற்று (27) சனிக்கிழமைமுழுநாள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டனர்.

குருநாகல் மாவட்டத்தின் குருநாகல் மாநகர சபை, குளியாப்பிட்டிய பிரதேச சபை, ரிதீகம பிரதேச சபை, நாரம்மல பிரதேச சபை, பொல்கஹவெல பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபைகளில் மக்கள் காங்கிரஸ், தனது மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குகின்றது.

அந்தவகையில், இந்தச் சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து  பொல்கஹயாய, ஏதன்டவெல ஹொரம்பாவ, மெடிவெல, பானகமுவ, குருநாகல், பொல்கஹவெல, குறீகொடுவ, சியம்பலாகஸ்கொடுவ, தொரனேகெதர, மடலஸ்ஸ, கால்லேகம ஆகியஇடங்களில் நேற்று பிரசாரக் கூட்டங்கள் இடம்பெற்றன.

இந்தக் கூட்டங்களில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். குருநாகல் மாவட்டத்தில் அநேகமான முஸ்லிம் பிரதேசங்களில் வசிக்கும் சிவில் சமூகப்பிரதிநிதிகளும், முக்கியஸ்தர்களும் உள்ளூராட்சி முறை வட்டார எல்லைப் பிரிப்பில் தமக்கு அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளதாகவும்,இதனால் தமக்கு கிடைக்கப்பெற வேண்டிய பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறைந்திருப்பதையும் கூட்டங்களின் போது, அமைச்சரிடம்சுட்டிக்காட்டினர்.

காலாகாலமாக தேசியக் கட்சிகளுக்கு தாங்கள் வாக்களித்து வந்தபோதும், தாம் வாழும் பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகள்எதுவுமே இடம்பெறாது, இன்னும் பழைமை வாய்ந்த கிராமங்களாகவேகாட்சியளிப்பதாகத் தெரிவித்தனர்.

வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு எந்தவிதமான முறையான திட்டங்களும் வகுக்கப்படவில்லை. பாதைகள் புனரமைக்கப்படாதுஇன்னும் கரடுமுரடாகவும், சேறும் சகதியுமாகவே காணப்படுகின்றன.தேர்தல் காலங்களில் மட்டும் வாக்குறுதிகளை வழங்கும்போது,அவர்களின் மீது நம்பிக்கைகொண்டு, இவ்வாறான கட்சிகளுக்கு நாங்கள் எமது வாக்குகளை வழங்கி வருகின்ற போதும், எந்தவிதமான அபிவிருத்திச் செயற்பாடுகளும் இற்றைவரை இடம்பெறவில்லை எனக்குறிப்பிட்டனர்.

இந்தப் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்ட அமைச்சர் ரிஷாட்பதியுதீன், தனது தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாட்டத்தில் தனித்துக் களமிறங்கியதற்கான காரணத்தை விவரித்தார்.

“கடந்த பொதுத் தேர்தலில் எமது கட்சியின் சார்பாக ஆளுமை மிக்கவேட்பாளர் ஒருவரை நாங்கள் நிறுத்திய போதும், முஸ்லிம் அரசியல்வாதிகளின் திருகுதாளங்களினாலும். நமது மக்களின் ஒற்றுமையீனத்தினாலும் சில ஆயிரம் வாக்குகளால் தோல்வியுற நேர்ந்தது. எனினும், குருநாகல் மாவட்டத்தில் எமது கட்சிக்கு பாராளுமன்றத்திலோ, மாகாண சபையிலோ, உள்ளூராட்சி சபைகளிலோ மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத போதும், தேர்தலில்கொடுத்த வாக்குறுதிகளை முடிந்தளவு நிறைவேற்றியிருக்கிறோம்.

ஆண்டாண்டு காலமாக இந்தப் பிரதேசத்தில் அரசியல் செய்த முஸ்லிம் கட்சிகளை விட, நாங்கள் குறுகிய காலத்தில், இயன்றளவு பணிகளைநிறைவேற்றித் தந்திருக்கின்றோம் என்ற நிம்மதி எமக்குண்டு.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எமது கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும், நாங்கள் இன ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும் தேசியக் கட்சிகளில் உள்ள முக்கியஸ்தர்கள் சிலர், போலியான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக அறிகின்றோம்.

தேர்தல் முடிந்ததும் உங்கள் பிரதேசத்தில் தாங்கள் செய்யத்திட்டமிட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளை நிறுத்தப்போவதாகஅச்சுறுத்தியுள்ளனர். இத்தனை ஆண்டுகாலம் செய்யாத சேவைகளை இப்போது செய்யப் போவதாக கூறும் இவர்களின் அச்சறுத்தல்களுக்கு,நீங்கள் பயப்பட வேண்டியதில்லை.

இந்த அரசை பதவியில் அமர்த்துவதற்கு முஸ்லிம் சமூகத்தின் பங்களிப்பையும், எமது கட்சியின் பங்களிப்பையும் அவர்கள் மறந்து செயற்படுவது வேதனையானது. நாங்கள் இறைவனைத் தவிர வேறுஎவருக்கும் அஞ்சப்போவதில்லை.

நீங்கள் உள்ளூராட்சி சபை தேர்தலில், ஒற்றுமையுடன் எமது கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம், அபிவிருத்திகளை உங்கள் காலடிக்குக்கொண்டுவர நாம் நடவடிக்கை எடுப்போம்” இவ்வாறு அமைச்சர்தெரிவித்தார்.