தவத்தின் போராட்டம் தமிழக விவசாயிகள் கச்சை அணிந்து நடத்திய போராட்டத்தை நினைவுபடுத்துகின்றது

“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்
தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்”

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் தவம் அவர்களுக்கு!

“அக்கரைப்பற்றில் அரசியல்வாதிகள் வன்முறைகளில் ஈடுபடுவதாகவும் அவ்வாறானவர்களை கைது செய்யுமாறு கோரியும் “மேலாடை அற்ற பேராட்டம்” ஒன்றை இன்று (20) நீங்கள் முன்னெடுத்ததாக அறிகிறேன்.

இந்தப் போராட்டத்தில் நீங்கள் காணப்படும் காட்சியானது, சில மாதங்களுக்கு முன்னர் தமிழக விவசாயிகள் டில்லி நாடாளுமன்றத்துக்கு முன்பாக கச்சை அணிந்து நடத்திய போராட்டத்தை எனது ஞாபகத்துக்கு கொண்டு வருகிறது.

நீங்கள் தேசிய காங்கிரஸின் சக்திமிக்க முக்கியஸ்தராக இருந்த காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் நோன்பு தினம் ஒன்றில் உங்களது பிரதேசத்துக்கு வருகை தர முயற்சித்த போது, அவரின் வருகையைக் கணடித்து அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம், வீதி மறியல் பேராட்டங்களை நடத்திய சம்பவம் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அதனை யார் முன்னின்று நடத்தியது என்பது உங்கள் மனச்சாச்சிக்கு தெரியாத விடயம் அல்ல..

அமைச்சர், ஒரு கட்சியின் தலைவர் என்ற இரு விடயங்களுக்கும் அப்பால் ஒரு முஸ்லிம் வருகிறார் என்று மனிதாபிமானத்துடன் இஸ்லாமிய கொள்கையோடும் ஒன்றிப் போகாத நிலை கொண்டவர்களாக நின்று கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களை நோன்பு துறக்கக் கூட அனுமதிக்காத காட்டு மிராண்டித்தனமான அரசியல் கலாசாரத்தை அரங்கேற்றியவர்கள் யார்? அதற்கு தலைமை வகித்தவர் எவர் என்பதெல்லாம் உங்களுக்கு இன்று ஞாபகம் உள்ளதா?

அக்கரைப்பற்று பிரதேசத்தில் அரசியல் வன்முறைக் கலாசாரத்தை தோற்றுவித்து, அந்த மக்களின் உணர்வுகளை தவறான வழியில் திசை திருப்பி வழி நடத்திய நீங்களே இன்று அக்கரைப்பற்றில் அரசியல்வாதிகள் வன்முறைகளில் ஈடுபடுவதாகவும் அவ்வாறானவர்களைக் கைது செய்யுமாறு கோரி “மேலாடை அற்ற பேராட்டம்” நடத்துவதனை “பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்” என்று கூறுவதா? இன்றேல் தன்வினைச் தன்னைச் சுடும் என்று சொல்வதா?

– ஏ.எச்.சித்தீக் காரியப்பர்.