சாய்ந்தமருது மக்கள் ஏமாற்று அரசியல்வாதிகளுக்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டும் : பைசர் முஸ்தபா

எம்.வை.அமீர்

சாய்ந்தமருது மக்கள் ஏமாற்றப்பட்டதைக் கண்டு வேதனையடைந்ததாகவும் பிரதமர் இந்த மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக வேண்டிய ஏற்பாடுகளை தான் செய்து வந்ததாகவும் அமைச்சர் றிஷாட் சாய்ந்தமருதுக்கு தன்னை அழைத்துவந்து வாக்குறுதியளிக்க வைத்ததாகவும் அதன்பின்னர் கல்முனை மக்கள் தன்னைச் சந்தித்து சாய்ந்தமருதை மட்டும் தனியாக பிரித்தால் சிக்கல் ஏற்படும் என்று விளக்கியதாகவும் அப்போது அமைச்சர் றிஷாட் கூட இவ்வாறானதொரு நிலை இருப்பதை அறியவில்லை என்று கூறியதாகவும் அதன் பின்னர் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் பேசியதாகவும் உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் 2018-01-18 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சாய்ந்தமருது அமைப்பாளரின் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சாய்ந்தமருது மற்றும் கல்முனை மக்களுக்கு சிக்கலேற்படுத்த தான் விரும்பவில்லை என்றும் இந்த மக்களின் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் ஹக்கீமும் றிஷாட்டும் ஒன்றாக இணைந்து கூறினால் சாய்ந்தமருதுக்கு தான் வழங்குவதாக கூறியிருந்ததாகவும் தெரிவித்தார். தான் கொழும்பில் இருப்பவன் என்றும் இங்குள்ள நிலைமைகளை அறிந்தவர்களே முடிவுக்கு வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கல்முனையை நான்காக பிரிப்பதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டதாகவும் அவ்வாறு பிரிப்பதானால் தமிழ் மக்களின் கருத்துக்களும் உள்வாங்கப்படவேண்டிய தேவை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். நான்காக பிரிப்பதற்கு என்றால் அதற்க்கான முன்னெடுப்புகள் எடுக்க வேண்டிய தேவையுள்ளதாகவும் தெரிவித்தார்.

தான் இங்கு வந்தது அரசியல் செய்வதற்க்காக அல்ல என்றும் சாய்ந்தமருது மக்கள் யாருக்கு வாக்களித்தாலும் தனக்கு எவ்வித மாற்றமும் வரப்போவதில்லை என்றும் ஏற்கனவே சாய்ந்தமருது மக்களுக்கு ஒரு வாக்குறுதி வழங்கியிருந்ததாகவும் ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக மாறவேண்டி ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

தான் அரசியல் செய்வது இறைவனுக்காக என்றும் தான் யாருக்கும் பயப்படுபவன் இல்லை என்றும் அளுத்கம கிரன்ட்பாஸ் சம்பவங்கள் இடம்பெற்றபோது சமூக நோக்கில செயற்பட்டதாகவும் மற்றவர்களைப்போல் போட்டோக்களுக்கு முகங்களைக் காட்டுபவர்களாக இருக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

தான் இந்த மக்கள் சந்திப்புக்கு வருவதில் தடைகள் ஏற்படுத்தப்படும் என்று சிலர் கூறியதாகவும் அவ்வாறான தடைகளுக்கு தான் பயந்தவன் இல்லை என்றும் கிரன்ட்பாஸ் பிரச்சினைகளில் முன்னின்றவன் என்றும் தெரிவித்தார்.

ஏமாற்று அரசியல்வாதிகளை நிராகரிக்குமாறு கூறிய அமைச்சர் பைசர் முஸ்தபா, ஒற்றுமையை கைக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்,.தான் சாய்ந்தமருது மக்களை ஏமாற்றவேண்டிய தேவை இல்லை என்றும் சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிசபையை வழங்க ஜனாதிபதி தன்னை பணித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது கல்முனையில் 80% மாக இருக்கின்ற முஸ்லிம்களின் தொகை சாய்ந்தமருது  பிரியும்போது 60%  வீதமாக குறைவடையும் என்றும் இந்த பிரதேசத்தில் பல தலைவர்கள் இருப்பதால் அவர்கள் ஒற்றுமைப்பட்டு இருக்கப்போவதில்லை என்றும் அதனால் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார்.

மர்ஹும் அஷ்ரப் தனது தந்தையுடன் இணைந்து செயற்பாட்டவர் என்றும் அவரைப்பற்றி தான் நன்கு அறிந்தவன் என்றும் தற்போதைய தலைவர்கள் அவரது போட்டோவைப் போட்டுக்கொண்டு அரசியல் செய்வதாகவும் தெரிவித்தார். அவ்வாறான அரசியல்வாதிகளை வாக்களிப்பின் ஊடாக விரட்டியடிக்குமாறும் கையாலோ கல்லாலோ அல்ல என்றும் கேட்டுக்கொண்டார்.

சாய்ந்தமருது மக்கள் ஏமாற்று அரசியல்வாதிகளுக்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள் சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் பிரதிநிதிகள் என பலரும் பங்குகொண்டிருந்தனர். குறித்த நிகழ்வுக்கு தடைகள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டபோதும் அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை.

நிகழ்வின் ஆரம்பத்தில் தேர்தல் செயலக உயர் அதிகாரிகள் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.