அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவினால் பள்ளிகளுக்கு விடுமுறை ; விமானங்கள் ரத்து

அமெரிக்காவில் தற்போது குளிர்காலம் ஆகும். அங்கு குளிர் காலத்தில் கடுமையாக பனிப்பொழிவு இருப்பது வழக்கம். இந்த ஆண்டு வழக்கத்தைவிட மிக அதிகமாக பனிப்பொழிவு உள்ளது. அமெரிக்காவின் தெற்கு பகுதி மாகாணங்களில் பனிப்பொழிவு மோசமான நிலையை எட்டியுள்ளது. அங்கு 30 அடி உயரம் அளவு வரை ஆங்காங்கே பனிக்கட்டிகள் தேங்கி கிடக்கின்றன.


இதனால் சாலைகள் முற்றிலும் முடங்கிவிட்டது. விமான ஓடுபாதைகளும் பயன்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை உள்ளது. இதனால் தென் மாகாணங்களில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அட்லாண்டாவில் உள்ள ஜாக்சன் விமான நிலையத்தில் இருந்து செல்லும் 360 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல துர்காம் விமான நிலையத்தில் இருந்து 60 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல நாடு முழுவதும் பல இடங்களிலும் விமான போக்குவரத்தை நிறுத்தி உள்ளனர். அமெரிக்காவின் முன்னணி விமான நிறுவனமான அமெக்கன் ஏர்லைன்ஸ் 270 விமானங்களையும், டெல்டா ஏர்லைன்ஸ் 275 விமானங்களையும், யுனைடட் ஏர்லைன்ஸ் 700 விமானங்களையும் ரத்து செய்து இருப்பதாக அறிவித்துள்ளது.

டெக்சாஸ் மாநிலத்தில் பாதிப்பு மிக மோசமாக உள்ளது. அங்குள்ள ஆஸ்டின் நகரில் முற்றிலும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பனிப்பொழிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் டெக்சாஸ் பகுதியில் பனிப்புயலும் வீசியது. இதனால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கரோலினா, தெற்கு வெர்ஜினியா, நியூ இங்கிலாந்து ஆகிய பகுதிகளில் பனிப்புயல் வீசும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது. புளோரிடா, லூசியானா, மிசிசிபி, அலபாமா, நியூமெக்சிகோ, ஜார்ஜியா, தெற்கு கரோலினா, வடக்கு கரோலினா, கென்டகி உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் பனிப்பொழிவு உள்ளது.

ஜார்ஜியா, வடகரோலினா, லூசியானா மாகாணங்களில் நிலைமை மோசமாக இருப்பதால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பல மாகாணங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பனிக்கட்டி தேங்கி கிடப்பதால் ஏராளமான விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன.