அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை, நானே முன்னின்று அமுல்படுத்தவுள்ளேன் : ஹக்கீம்

மு.கா. அம்பாறை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடுவது மாற்றுக் கட்சிக்காரர்களுக்கு பெரிய தர்மசங்கடமாக இருக்கிறது. வன்னியில் யானையில் போட்டியிடும் அமைச்சர் இங்குவந்து, மு.கா. சின்னத்தை அடகுவைத்துவிட்டதாக புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது. அவருக்கு வன்னியில் இருக்கின்ற அதே நியாயம்தான், இங்கு எங்களுக்கு இருக்கிறது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
 
உதவிக் கல்விப் பணிப்பாளர் இக்பால் ஆசிரியர் தலைமையில் நேற்றிரவு (12) அக்கரைப்பற்றில் நடைபெற்‌ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றம்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.
 
அங்கு உரையாற்றிய ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;
 
இன்னும் சில நாட்களில் ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க இந்த பகுதிக்கு வருவார். வட, கிழக்கை பிரித்தது யாரென்று அவர் சொல்வார். வட, கிழக்கு இணைப்பு தொடர்பான முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. உண்மை நிலை தெரியாமல், தேசிய விவகாரங்களில் இவ்வாறு பேசித்திரிவது இவர்களின் அரசியல் வங்குரோத்து நிலையையே எடுத்துக் காட்டுகிறது.
 
 
வட-கிழக்கு என்பது தமிழர்களின் ஏகோபித்த முடிவாக இருக்கின்ற நிலையில், இதனை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிப்பதாக கூறுகின்றனர். இந்த விவகாரத்தில் அன்றிருந்த அதே நிலைப்பாட்டில்தான் இன்றும் மு.கா. இருந்துகொண்டிருக்கிறது. பலவந்தமாக இணைக்கப்பட்ட வட-கிழக்கை நாங்கள் எதிர்த்தோம். வட-கிழக்கு தற்காலிக இணைப்புக்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டுமென்ற நியதி இருந்தபோது, இதுகுறித்த எமது நிலைப்பாட்டை மறைந்த அஷ்ரஃப் காலத்திலிருந்தே சொல்லிவந்திருக்கிறோம்.
 
நீதிமன்றத்தினூடாக வட-கிழக்கு இணைப்பு பிரிக்கப்பட்ட நிலையில், தற்போது அதை மீண்டும் இணைக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியம் கோரிவருகின்றது. முஸ்லிம் தேசியத்தின் அனுமதியுடனேயே இந்த இணைப்பு சாத்தியப்படும் என்று அவர்கள் சொல்கின்ற நிலையில், இடைநடுவில் புகுந்துகொண்டு, இரண்டும் பிரிந்திருக்கவேண்டும் என்று சபை குழப்பும் நடவடிக்கையை செய்யவேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. இதை சொல்வதன்மூலம், தெற்கிலுள்ள சிங்களத்தின் எடுபிடியாக மு.கா. இருக்கப்போவதில்லை என்பதற்கான நியாயத்தை மாத்திரம்தான் நாங்கள் சொல்லிவருகிறோம்.
 
வடக்கையும் கிழக்கையும் இணைக்கவேண்டும் என்று மு.கா. வற்புறுத்தவில்லை. இந்த இணைப்பு விவகாரத்தில் அரசியல் யாப்பில் என்ன சொல்லியிருக்கிறது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு மாகாணத்தை இன்னொரு மாகாணத்துடன் இணைக்கின்ற போது குறித்த மாகாணத்தின் அங்கீகாரம் பெறப்படவேண்டும். இரு மாகாண சபைகளிலும் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு, கடைசியாக பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும்.
 
வட-கிழக்கு இணைப்புக்கு சிங்கள அரசியல்வாதிகள் நிறைந்துள்ள பாராளுமன்றத்தில் 2/3 ஆதரவு கிடைக்குமா என்பதை முதலில் சிந்திக்கவேண்டும். இதற்கான அங்கீகாரம் கிடைக்குமா, இது சாத்தியப்பாடுகள் குறித்தும் வட-கிழக்கு இணைப்பு தொடர்பில் கூப்பாடு போடுகின்‌ற அரசியல் கட்சிகள் சிந்திக்கவேண்டும். சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஒருமித்து செயற்படுவதற்கு தமிழ் – முஸ்லிம்களிடையே ஓரவுக்காவது புரிந்துணர்வு தேவை. இந்த புரிந்துணர்வை குழைக்கின்ற வகையில் எமது நடவடிக்கைகள் அமைந்துவிடக்கூடாது.
 
மாயக்கல்லிமலை விவகாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் களமிறங்கி போராடியிருக்காவிட்டால், அந்தப் பிரச்சினை இன்னும் பூதாகரமாகியிருக்கும். எங்களுடைய விவசாய காணிகளை தடுத்துவைத்திருக்கிறார்கள். வட்டமடு விவசாயிகள் பல நாட்களாக போராட்டங்களை நடத்தினார்கள். இந்த விடயங்களில் களத்தில் நின்று முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்ட முன்னகர்வுகள் என்பது, எந்தவொரு அரசியல் கட்சிகளும் செய்யாதவை.
 
காணிப் பிரச்சினைகள் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை களத்துக்கு அழைத்துச் சென்று, ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு இப்போது ஜனாதிபதியின் செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்வுகள் குறித்துப் பேசுவதற்காக ஜனாதிபதியுடன் நேரம் ஒதுக்கித் தருமாறு ஜனாதிபதி செயலாளரிடம் கேட்டிருக்கிறோம். ஜனாதிபதியுடன் ஒட்டிக்கொண்டிருப்பதாக சொல்லிக்கொள்பவர்கள், இப்படியான எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை.
 
 
தற்போதைய ஜனாதிபதி எங்களுடைய தயவில் மீண்டும் ஜனாதிபதியாகின்‌ற நோக்கம் இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியில் அவர் வைத்திருக்கின்ற நம்பிக்கை மூலம்தான் இவற்றை சாதிக்கவேண்டும். பத்தாயிரம் வாக்குகள் தேவையா, இல்லை ஒரு இலட்சம் வாக்குகள் தேவையா என்பதை ஜனாதிபதி சிந்திக்கவேண்டும்.
 
முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவமினால் வெளியிடப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை, நானே முன்னின்று அமுல்படுத்தவுள்ளேன். விசேட நீரோட்ட திட்டத்தின் மூலம்  அக்கரைப்பற்று வடிகாலமைப்பு, பெண்களுக்கு தனியான நடைபாதை மற்றும் கர்ப்பிணிகளுக்கான பூங்கா என்பவற்றையும் ஒன்றாகச் சேர்த்து செய்து தருவேன்.
 
கல்ஓயா திட்டம் ஆரம்பித்ததிலிருந்து சம்புக்களப்பு, பெரியகளப்பு வடிச்சல் என்பது முடிவுறாத பிரச்சினையாக இருந்துவருகிறது. இதனால் தாழ்நில பிரதேசங்களிலுள்ள மக்கள் பாதிக்கப்படுவதுடன், பல்லாயிரக்கணக்கான காணிகள் பயிர்ச்செய்கையின்றி காணப்படுகின்றன. இந்த வடிச்சலை செய்வதன்மூலம் அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களிலுள்ள சுமார் 5,000 ஏக்கர் காணிகளில் மீண்டும் விவசாயம் செய்யமுடியும். இத்திட்டத்துக்கு முதற்கட்டமாக இவ்வருடத்தில் 200 மில்லியன் ரூபாவை ஒதுக்கவுள்ளேன்.
 
அஞ்சாதவாசம் செய்யும் அரசியல்வாதிகளை விடுத்து, அக்கரைப்பற்றின் ஆட்சியை எங்களிடம் கையளித்துப் பாருங்கள். ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸிடம், அபிவிருத்தி செய்வதற்கு தேவையான அமைச்சும் இருந்துகொண்டிருக்கிறது. அக்கரைப்பற்று அபிவிருத்தியில் தாராளமாக ஒதுக்கீடுகளை முஸ்லிம் காங்கிரஸ் செய்துகாட்டும் என்றார்.
 
இக்கூட்டத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம், கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
 
ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்