மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுவர்கள் இறைவனின் கூலி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் செயற்பட வேண்டும்: எம்.எஸ்.உதுமாலெப்பை

 

எம்.ஜே.எம்.சஜீத்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுவர்கள் மக்களிடமிருந்து நன்றியினை எதிர்பார்க்காது இறைவனின் கூலி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் நீண்டகாலமாக பயன்பெறக்கூடிய வகையில் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்த வேண்டுமென கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
தேசிய காங்கிரசின் வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஜஃபர் ஜே.பியை ஆதரித்து யூ.கே.றஹிம் ஜே.பி தலைமையில் அட்டாளைச்சேனை இக்ரஃ வட்டாரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நமது மக்கள், மக்கள் பிரதிநிகளுக்கு வாக்களித்துவிட்டு தங்களுக்கு தேவையானவற்றை எல்லாம் செய்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர். நம்மால் முடிந்தவரை வாக்களித்த மக்களை ஏமாற்றாமல் மக்களின் தேவைகளை அறிந்து சேவையாற்ற வேண்டும். சமூகத்தில் எம்மோடு இணைந்து வாழும் எமது ஏழை மக்களின் நலனில் நாம் எப்பேதும் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
ஏழை மக்களின் தேவைகளையறிந்து நாம் புரிகின்ற பணிகளுக்கு இறைவனின் கூலி கிடைக்கும். மக்கள் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிவிட்டு மக்கள் பிரதிநிகளை மறந்துவிடும் நிலைமையில் தான் நாம் இன்றைய உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். அவைகளை என்னி நாம் ஒருபோதும் வருந்தக்கூடாது. 
தேசிய காங்கிரசினால் எமது அட்டாளைச்சேனை மண்ணுக்கு வழங்கப்பட்ட அரசியல் அதிகாரத்தினால் உச்ச பலனை நாம் அடைந்துள்ளோம். அட்டாளைச்சேனை பிரதேசத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜலால்தீன் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டார். பின்னர் பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களும் பல்வேறு அபிவிருத்திப்பணிகளை செய்தார். 
தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லா எமது மண்ணின் அபிவிருத்தியில் எதிர்கால சந்ததியினர் பலன்பெறக்கூடிய அபிவிருத்தித் திட்டங்களையும், நமது பிரதேசத்திலுள்ள இயற்கை வளங்களையும், குறிப்பாக சம்புக்களப்பு, கோணாவத்தை ஆறு, மற்றும் விவசாயத்துறை போன்ற பாரிய திட்டங்கள் உட்பட கல்வித்துறைக்கும் பாரிய பங்களிப்புக்களை வழங்கினார். 
நாம் ஆரம்பித்து நிறைவு செய்யப்படாமலுள்ள அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லா ஆகியோரின் ஒத்துழைப்புக்களுடன் அட்டாளைச்சேனை பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வதற்கு உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அட்டாளைச்சேனைப் பிரதேச மக்கள் தங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் வாழும் நமது மக்கள் வருகை தந்து ஓய்வு எடுக்கக்கூடிய இட்மாகவும், நடைபாதைகளை உருவாக்கி நமது மக்கள் நீண்டகாலமாக பாவிக்கக்கூடிய வகையில் அழகு படுத்தும் திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம். இயற்கை வளங்களை பாதுகாத்து எதர்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் நீண்ட கால திட்டங்களை செயற்படுத்திய போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்தவர்கள் இவ்வாறான சிறந்த திட்டங்களை அரசியல் காரணங்களுக்காக அன்று நிறுத்தினர்.
இருந்தபோதிலும் பல சவால்களுக்கு மத்தியில் 90வீதமான பணிகளை எங்களால் நிறைவு செய்ய முடிந்தது. குறிப்பாக அட்டாளைச்சேனை பிரதேச சபையினுடைய அதிகாரத்தினை தேசிய காங்கிரசிடம் வழங்கும் போது இவ்வாறான அபிவிருத்திப் பணிகளை மேலும் சிறந்த முறையில் எங்காளால் மேற்கொள்ள முடியும். நமது பிராந்தியத்தில் வாழும் மக்கள் குடும்பங்களுடன் சென்று தங்களது ஓய்வு நேரங்களை கழிப்பதற்கு பாதை ஓரங்களிலும், காடுகளிலும் சென்று ஓய்வெடுக்கும் நிலைமைகளை நாம் காண்கின்றோம்.
எமக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ள இயற்கை வளங்களை நாம் அழகுபடுத்தி அவைகளை நன்மையடையக்கூடிய வகையில் பயன்படுத்த வேண்டும். எனவே எழில் மிக்க கோணாவத்தை ஆற்றினை பாதுகாத்து சுத்தமாக வைத்துக்கொள்வது காலத்தின் தேவையாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.