அக்கரைப்பற்றை ஒரே குரலாக்க இரு துருவங்கள் இணைகின்றனவா?

அஜ்மல் அஹம்மத்

அக்கரைப்பற்றை ஒரு குரலாக்க இரு துருவங்கள் இணைகின்றனவா? என்ற தலைப்பிலான சுவரொட்டிகள் அக்கரைப்பற்று முழுவதும் நேற்றரவு (11) பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

இச்சுவரொட்டியில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் முன்னாள் அமைச்சர் வேதாந்தி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் ஆகியோருடைய படங்கள் இடப்பட்டுள்ளன.

வேதாந்தி சேகு இஸ்ஸதீன் முஸ்லிம் காங்கிரஸில் மீண்டும் தவிசாளராகின்றார் என செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நேரத்தில் இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இச்சுவரொட்டிகள் தற்போது முஸ்லிம் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் அக்கரைப்பற்று மக்களிடம் பெரும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. பொது மக்கள் இவ்விடயம் தொடர்பில் வீதிகளில் நின்று பேசிவருகின்றமையும் அவதானிக்க முடிகின்றது.

ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் எம்.எச்.சேகு இஸ்ஸதீன் ஆகியோர் கடந்த 30 வருடங்களாக எதிர் எதிர் அரசியல் செய்து வந்தனர். இவர்கள் இருவரும் ஒருபோதும் இணைய மாட்டார்கள் என்ற நிலைப்பாடு பொது மக்களிடம் இருந்தது. எனினும் அக்கiரைப்பற்று கல்வியலாளர்களின் எண்ணப்பாடு இவர்கள் இருவரும் இணைந்து அக்கரைப்பற்றின் நன்மைக்காக செயற்பட வேண்டும் என்பதாகும். இந்நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

அரசியல் ரீதியாக இவர்கள் இருவருக்குமிடையில் கொள்கை முரண்பாடுகள் இருந்தலும் இவர்கள் இருவரும் ஒன்றிணைவதானது அக்கiரைப்பற்றுக்கு மாத்திரமன்றி கிழக்கு மாகாண அரசியலிலும் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.

குறிப்பாக தேசிய காங்கிரஸ் தலைமையினை வலுப்படுத்துவதற்கும் வடக்கு கிழக்கு பூராக விரிவுபடுத்துவதற்கும் சேகு இஸ்ஸதீனின் இணைவு பாரிய உறுதுணையாக இருக்கும் என்பதுடன் இக் கூட்டு முஸ்லிம் அரசியலிலும் பாரிய தாக்கத்தையும் செலுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.