பாராளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து செயற்பாடுகளும் மும்முரமாக இடம்பெற்று வரும் நிலையில் தீயணைப்புப்படை பிரிவினர் போல் தேர்தலுக்கான தயார் நிலையில் இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
அரசானது பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் ஒன்றுக்குச் செல்லும் வர்த்தமானி அறிவித்தலை அறிவிக்கும் வரை தேர்தல் திணைக்களத்தினால் எப்போது தேர்தல் நடைபெறும் என்றும் எந்த முறையில் நடைபெறும் என்பதையும் அறிவிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் கள் செயலகத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பொதுத் தேர்தல் ஒன்றுக்கான அனைத்துச் செயற்பாடுகளும் நாடளாவிய ரீதியில் எமது அதிகாரிகளினால் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே வருடாந்தம் மேற்கொள்ளப்படுகின்ற வாக்காளர் கணக்கெடுப்பு அல்லது தேருநர் இடாப்பு மீளாய்வு இம்மாதம் 15 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வதிவொன்றை கொண்டுள்ள அனைத்து வீடுகளுக்கும் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் எதிர்வரும் ஜுன் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் பகிர்ந்தளிப்பதற்கு கிராம அலுவலர்கள், விசேட கணக்கெடுப்பாளர்கள் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை எதிர்வரும் ஜுலை 31 திகதிக்கு முன்னர் நாடாளவிய ரீதியில் உள்ள கணக்கெடுக்கும் அலுவளர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
எதிர்வரும் பொது தேர்தல் தொடர்பில் தேர்தல் திணைக்களமானது தீயணைக்கும் படைப் பிரிவினர் போல தமது செயற்பாடுகளுக்கு தயார் நிலையிலேயே உள்ளதோடு ஒரு சில செயற்பாடுகளுக்காக இன்னும் 50 அல்லது 60 நாட்கள் தேவைபடுகிறது.
இவ்வாறான நிலையில் மக்கள் மத்தியிலும் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளடங்களாக அனைவர் மத்தியிலும் தேர்தல் எப்போது நடைபெறும் எந்த முறையில் நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பில் தேர்தல் திணைக்களத்திற்கு பெருமளவிலான தொலை பேசி அழைப்புகளும் கடிதங்களும் வந்த வண்ணம் இருக்கின்றன.
தேர்தல் முறை சட்டம் மற்றும் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அடிபடையில் இந்த பாராளுமன்றத்தின் ஆயுட்காலமானது அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் அரசானது பாராளுமன்றதை கலைத்து தேர்தல் வேட்புமனு திகதிஇ தேர்தல் திகதி என்பவற்றை வர்த்தமானியுனுடாக பிரகடனப்படுத்தும் வரை தேர்தல் திணைக்களத்திற்கோ அல்லது தேர்தல்கள் ஆணையாளர் என்ற ரீதியில் எனக்கோ எதனையும் குறிப்பிட முடியாது.
தேர்தல் முறை சட்டத்தின் 10 ஆவது சரத்தில் இது தொடர்பிலான அனைத்து விடயங்களும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. தேர்தல் திகதி அறிவிக்காமை மற்றும் தேர்தல் காலப்பகுதியை நீடிக்கின்றமை தொடர்பில் எனக்கோ தேர்தல் திணைக்களத்திற்கோ எவ்வித சம்பந்தமும் இல்லை.
ஆட்சியில் இருக்கும் அரசானது எப்போது பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல் ஒன்றுக்கு செல்வதற்கான வாத்தமானி அறிவித்தலை வௌியிடுகின்றதோ அதிலேயே வேட்பு மனுதாக்கள் செய்யப்படும் தினம்இ மற்றும் தேர்தல் திகதி என்பன உள்ளடக்கபடும். அதன் பின்னரே தேர்தல்கள் செயலகம் தேர்தல் திகதியின் அடிபடையில் தேர்தலை நீதியானதும் சுதந்திரமானதுமான முறையில் நடத்துவதற்கு ஏற்பாடுகளை முன்னெக்கும். இதனை அனைவரும் புறிந்து கொள்வது அவசியமானது.
இருந்தபோதிலும் இம்முறை தேர்தல்தினத்தை சனிக்கிழமை அன்று நடத்துவதற்கான யோசனையை முன்வைத்துள்ளோம். காரணம் மக்களுக்கு ஏற்றவாரன விடுமுறையை பெற்றக்கொள்ள இது சந்தாப்பமாக அமையும்.