அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமாக வரவுள்ள தேர்தல் முறை மாற்றம் தொடர்பான சட்டமூலத்துக்கு நேற்றிரவு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எனினும் சட்ட மூலத்தில் மேலும் திருத் தங்களை உள்வாங்குவதற்கும் அது தொடர் பில் ஆராய்வதற்கும் அமைச்சரவையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் சில தினங்களுக் குள் தேர்தல் முறை மாற்ற சட்ட மூலத் துக்கு திருத்தங்கள் பெற்றுக்கொள்ளப்பட வுள்ளதுடன் அதனை வர்த்தமானியில் வெளி யிடவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மிக நீண்ட நேர வாதப் பிரதிவாதங்களுக் குப் பின்னரே தேர்தல் முறை மாற்ற சட்டமூலத்துக்கு அமைச்சரவையின் இணக்கப் பாடு எட்டப்பட்டுள்ளது. அந்தவகையில் தேர்தல் முறை மாற்ற வரைபை அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலமாக சில தினங்களில் வர்த்தமானியில் வெளியிட்ட பின்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றைய தினம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அமைச்சரவை உப குழுவினால் முன்வைக்கப்பட்ட யோசனை குறித்து நேற்றும் பல கருத்துக்களும் யோசனைகளும் முன்வைக்கப்பட்டதுடன் இறுதி யில் தேர்தல் முறை மாற்ற சட்டமூலத்துக்கு அமைச்சவையின் அங்கீகாரம் கிடைத்ததாக கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
” அமைச்சரவைக் கூட்டத்தின்போது தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் நீண்டநேரம் ஆலோசிக்கப்பட்டது. மிக நீண்ட நேர வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இறுதியில் தேர்தல் முறை மாற்றத்துக்கு அங்கீகாரம் கிடைத்தது “” என்று குறித்த அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த 20 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதும் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படாமையின் காரணமாக நேற்றைய தினம் வரை அது தொடர்பில் ஆராய்வதற்கு தீர்மானிக்கப்படடது. அதன்படியே நேற்றைய தினம் தேர்தல் முறை மாறறம் குறித்து ஆராயப்பட்டதுடன் அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் முறை மாற்றம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவில் அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம, எஸ்.பி. திசாநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல, கபிர் ஹஷீம், சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், கயந்த கருணாதிலக்க, பழனி திகாம்பரம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
இந்த அமைச்சரவை உப குழுவானது பல்வேறு கூட்டங்களை நடத்தி இறுதியாக தேர்தல் முறை வரைபை தயாரித்து அண்மையில் ஜனாதிபதிக்கு கையளித்திருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது இது தொடர்பில் ஆராயப்பட்டதுடன் தொடர்ந்து யோசனைகளை பெறுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
அமைச்சரவை உப குழு தயாரித்த யோசனைக்கு சில கட்சிகளின் பிரதிநிதிகள் மேலும் சில திருத்தங்களை முன்வைத்துள்ளனர். குறிப்பாக சிறுபான்மை அரசியல் கட்சிகளும் சிறு அரசியல் கட்சிகளும் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் தமது யோசனைகளை முன்வைத்திருந்தன.
புதிய தேர்தல் முறை மாற்றத்தின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. 196 உறுப்பினர்களை மாவட்ட ரீதியில் தெரிவு செய்யவும் 59 உறுப்பினர்களை தேசிய பட்டியல் ரீதியில் தெரிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொகுதி மற்றும் விகிதாசார முறைமைகளை கொண்ட கலப்பு தேர்தல் முறையை கொண்டுவருவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தது. இதன்படி விருப்பு வாக்கற்ற தேர்தல் முறையே வரவுள்ளது.
அத்துடன் ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இடம்பெறும் வகையில் இந்த தேர்தல் முறை மாற்ற யோசனை வந்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் வாக்குறுதியில் தேர்தல் முறையை மாற்றுவதாக வாக்குறுதியளித்திருந்தார். அதன்படி தேர்தல் முறையை மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைளை எடுத்திருந்தது.
ஆனால் கடந்த சில வாரங்களாக தேர்தல் முறை மாற்ற விடயத்தில் அரசாங்கம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வந்தது. குறிப்பாக சிறுபான்மை கட்சிகள் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் கவனம் செலுத்தியதுடன் சிறுபான்மை அரசியல் பிரதிநிதித்துவங்களில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அதன்படியே இறுதியில் தற்போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.