எமது அரசியல் பலத்தை உறுதிப்படுத்தினால் மாத்திரமே அரசாங்கத்திற்கு உள்ளே எதையும் உரிமையுடன் கேட்டு பெறமுடியும் : மனோ கணேசன்

அரசாங்கத்தை உருவாக்கி, சுமார் மூன்று வருடங்களுக்கு பிறகே இப்போது ஒரு தேர்தல் வருகிறது என அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழு கூட்டத்தில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 
தொடர்ந்தும் கூறுகையில்,
கடந்த அரசாங்கத்தை மாற்றும் நம்பிக்கையை மக்கள் மத்தியில் உருவாக்கியது, நாங்களே. 2005ஆம் வருடத்தில் இருந்து போராட தொடங்கி 2015இல் அந்த மாற்றத்தை கொண்டு வந்தோம்.இன்று இருக்கும் வாய்பேச்சு வீரர்கள், பலர் அன்று இருக்கவில்லை. நாம் உயிரை கொடுத்து போராடினோம். 2005ஆம் வருட காலத்திலேயே, என் நண்பர்களான நடராஜா ரவிராஜையும், லசந்த விக்ரமதுங்கவையும் நான் இழந்தேன்.நானும் மயிரிழையில் தப்பினேன். அப்போதுதான், மாற்றத்திற்கான போராட்டம் ஆரம்பித்தது. ஆகவே இது நாம் கஷ்டப்பட்டு உருவாக்கிய அரசாங்கம்.அரசாங்கத்தை உருவாக்கிய சுமார் மூன்று வருடங்களுக்கு பிறகு இப்போது ஒரு தேர்தல் வருகிறது. இதில் நாம் என்ன செய்ய வேண்டுமென்ற கேள்வி எழுகிறது.முதலில் இது அரசாங்கத்தை மாற்றும் தேர்தல் அல்ல என்பதையும், நாம் உருவாக்கிய அரசாங்கத்தை பலப்படுத்தும் தேர்தல் என்பதையும் புரிந்துக்கொள்ள வேண்டும். அதாவது அரசாங்கத்துக்குள் இருக்கும் கட்சிகள் தம்மை பலப்படுத்திக்கொள்ளும் தேர்தல்.
ஆகவே நாம் எம் பலத்தை காட்ட வேண்டும். அரசாங்கத்திற்கு உள்ளேயே நாம் பலமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், நாம் கூண்டோடு தொலைந்தோம். எம்முடன் இருப்பவர்களே எம் தலையில் மிளகாய் அரைத்து எம்மை ஒட்டுமொத்தமாக தொலைத்து விடுவார்கள்.ஆகவே எமது அரசியல் பலத்தை உறுதிப்படுத்தினால் மாத்திரமே அரசாங்கத்திற்கு உள்ளே எமக்கு எதையும் உரிமையுடன் கேட்டு பெறமுடியும் என குறிப்பிட்டுள்ளார்.