எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், கூட்டு எதிர்க்கட்சியும் இணைந்து போட்டியிடும் வகையில் புரிந்துணர்வு உடன்படிக்கையினை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக பேசப்படுகிறது.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர்களும், கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டு எதிர்க்கட்சி இடையிலான ஐக்கியத்தின் தேவை குறித்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மீண்டும் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட அவரது குடும்பத்தினர் மிகவும் இரகசியமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் ஒரு கட்டமாக மகிந்த ராஜபக்சவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் தயாசிறி ஜயசேகரவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச இந்த இரகசிய பேச்சுவார்த்தைக்கு இதுவரை இணக்கம் தெரிவிக்கவில்லை என குறிப்பிடப்படுகிறது. எனினும் ஷிரந்தி ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் இதற்கு சாதகமான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.