சோமாலியா தலைநகர் மொகடிசுவில் உள்ள ஓட்டலில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 500 -ஐ தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிசுவில் கடந்த மாதம் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன. மொகாடிசுவில் வெளியுறவு துறை அமைச்சகம் அருகே உள்ள சபாரி என்ற ஓட்டல் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு நிரப்பிய லாரியை மோதி வெடிக்க செய்தனர்.
அதில் ஓட்டலில் பெரும் பகுதியும், அதன் அருகே இருந்த பல கட்டிடங்களும் இடிந்து தரைமட்டமாயின. ரோட்டில் நிறுத்தியிருந்த கார்கள், லாரிகள், வேன்கள் எரிந்தன. குண்டு வெடித்ததால் பீதி அடைந்த மக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தாக்குதல் நடந்த இடத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. ரத்தம் தோய்ந்த செருப்புகளும், ஷூக்களும் சிதறி கிடந்தன.
இந்த பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் அக்டோபர் இறுதி வரை 358 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், ஏராளமானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிட்டி அதிகாரிகள், வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 500-ஐ தாண்டியுள்ளது என தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், சோமாலியாவில் உள்ள ஓட்டலில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் கடந்த அக்டோபர் மாதம் இறுதி வரை 358 பேர் பலியாகி இருந்தனர். பலர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதற்கிடையே, கடந்த ஒரு மாதத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 521 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 300க்கு மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளனர்.
சோமாலியாவில் 2007-ம் ஆண்டு முதல் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடங்கியது. அவர்கள் நடத்திய தாக்குதலில் இதுவே மிக மோசமானதாக கருதப்படுகிறது. தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சோமாலியாவில் 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.