நல்லாட்சி நடக்கும் இந்நாட்டில் இருக்கும் நம்மனைவருக்கும் இன , மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதத்தின்பால் அழைப்பு விடுக்கின்றேன்.
என் உயிரினும் மேலான சகோதர சகோதரிகளே,எம் கண் முன்னே ஒரு சமூகம், மனிதர்களைக் கொண்ட கூட்டம் கருகிச் சாம்பலாகின்றது, கடலில் தத்தளிக்கின்றது, உண்ண உணவின்றி உயிர் பிரிகின்றது.
அவர்கள் போராளிகளல்ல, தனிநாடு கோரியவர்களுமல்ல, கிளர்ச்சிக் குழுக்களுமல்ல, மனிதத்தை சுமந்த வெறும் மனிதர்கள் தாம் அவர்கள். இவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்.உலக மனித உரிமைகள் பிரகாரம் அவர்கள் விரும்பி முஸ்லீம்களாய் இருக்கின்றார்கள். முஸ்லீம்கள் என்பதற்காய் பாவப்படாமல், மனிதத்திட்காய் இரக்கப்படும்,அனைவரும்இணைந்துகொ ள்ளவேண்டியதருணம்இதுவே. என ஐக்கிய மக்கள் பேரவையின் தலைவர் அன்வர் நௌஷாத் தனது அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்.
அன்புள்ளவர்களே, ஈரமுள்ள நெஞ்சக்காரர்களே, ஒரு நிமிடம் அந்த மனிதர்களுக்காய் ஒதுக்குவோம். அந்த மக்களை காக்க எங்களால் இயன்றதை செய்வோம். மனிதத்தைக் காத்து மனிதர்களாவோம்.
ஜம்மியத்துல் உலமாவினர் அவர்களுக்காய் இவ்வாரம் முழுவதும் எல்லாத்தொழுகையிலும் குனூத் அல்லது துஆ கேட்டிட பள்ளிவாயல்களுக்கு அழைப்பு விடுக்கட்டும். முஸ்லீம்கள் மீது வக்கிரத்தை கொட்டி தமது பாசிசத்தை காட்டிய அனைத்து மத பிரார்த்தனைகளும் அவர்களுக்காய் அமையட்டும். எமது அரசாங்கம் அவர்களுக்கு ஆதரவாய் தமது நிலைப்பாட்டை ஐ.நா விற்கும் அந்த நாட்டிக்கும் தெரிவிக்கட்டும்.. இதற்காக முஸ்லீம்களாகிய நாம் அமைதியான ஒரு நாள் நோன்பினை நோற்று முழுமையான கண்டனத்தை தெரிவிப்போம்.
அத்துடன் விரட்டியடிக்கப்பட்டு, இடமில்லாமல் தத்தளிக்கும் முஸ்லீம்களுக்கு இடமளிக்க எமது மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு எமது மகஜரை கையளிப்போம். இதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது ஐக்கியத்தை வெளிப்படுத்துவோம். அனைவரையும் படைத்து பரிபாலிக்கும் அந்த இறைவனுக்கே எல்லாப்புகழும்.
அன்வர் நௌஷாத்
தலைவர்,
ஐக்கிய மக்கள் பேரவை – சிவில் பிரஜைகள் சமூகம்