குரல்கள் அமைப்பின் தொடரும் மக்கள் சார் அதிரடி நடவடிக்கைகள்

 

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தினால் பட்டியடிப்பிட்டி கிராம சேவையாளர் பிரிவில் படத்தில் உள்ள வாராந்த சந்தைக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கான மதிப்பீட்டுச் செலவு 434,700 ரூபாய்கள் என்று தகவலோடு அரச இலச்சினை பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சின்னஞ் சிறிய கட்டடத்திற்கு இவ்வளவு தொகை செலவாகாது என்பது மிகவும் திண்ணமானது.எங்கோ ஒரு தவறு நடந்திருக்க வேண்டும்.அதே நேரம் இந்த வாரந்தச் சந்தை நிர்ணயிக்கபட்டிருக்கும் இடத்தில் இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஒரு சந்தைக் கட்டிடம் வரவிருப்பதாகவும் எமக்குத் தகவல்கள் கிடைக்கின்றன.அப்படியாயின் இந்த இடத்தில் இன்னொரு வாராந்த சந்தைத் தொகுதி கட்டுவதற்கான அவசியம் என்ன என்ற கேள்வியும் மக்களுக்குள் எழுகின்றது.

செலவு செய்யப்படுவது மக்கள் வரி செலுத்தும் நிதி.மக்களின் பணம்.பொது மக்கள் நிதி அனியாயமாக வீண்விரயம் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது.மக்களுக்கு எத்தனையோ தேவைகள் இருக்கும் நேரத்தில் ஏற்கனவே இரண்டு கோடி பெறுமதியான ஒரு சந்தை வரவிருக்கும்போது அதே இடத்தில் இன்னொரு சந்தைக் கட்டிடத்திற்காக பணத்தை விரயம் செய்வதும்,அதன் பெறுமதியை விட மிக அதிகமான மதிப்புத் தொகையை இட்டு அரச இலச்சினையோடு பெயர்ப்பலகை நிர்மாணிப்பதும் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் நிர்வாக செயற்திறன் மீது பல கேள்விகளை எழுப்புகின்றது.

ஒரு சிவில் அமைப்பு என்ற ரீதியில் VMOVE இன்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அக்கறைப்பற்று பிரதேச செயலகத்தில் நிர்மாணிக்கபட்ட சந்தைத் தொகுதி சம்பந்தமான கணக்கறிக்கை உட்பட அனைத்து தகவல்களையும் கோரி ஒரு மனுவை அக்கரைப்பற்றுப் பிரதேச செயலகத்தின் விதந்துரைக்கப்பட்ட உத்தியோக்த்திரிடம் சமர்ப்பித்தது.

இந்த மனுவை VMOVE ன் உறுப்பினர் சட்டத்தரணி ரதீப் அஹ்மத் இன்று சமர்ப்பித்தார்.

எமது மனுவுக்கான பதில்களைப் பொறுத்து குரல்கள் இயக்கத்தின் அடுத்த நடவடிக்கைகள் அமையும்.ஆவணங்கள் அனைத்தும் மக்கள் பார்வைக்காக எமது இணையத்தளத்திலும்,முகனூல் தளத்திலும் பிரசுரிக்கப்படும்.

இன்று அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நாம் சமர்ப்பித்த மனுவும்,அதனை பெற்றுக் கொண்டமைக்கான உதவி பிரதேச செயலகரின் ஒப்பமும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.