யாழ்ப்பாணத்தில் 1996ஆம் ஆண்டு இளைஞர்கள் காணாமல் போன சம்பவத்தில் இலங்கை இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்கவை நீதிமன்றில் ஆஜராகுமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
யாழ். நாவற்குழி பகுதியில் கடந்த 1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவத் தளபதியாக இருந்த துமிந்த கெப்பிட்டி வெலான என்பவரால் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் காணாமல் போயிருந்தனர்.
இது தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள், தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு கோரி சட்டத்தரணிகளான கு.குருபரன் மற்றும் எஸ்.சுபாசினி ஆகியோர் ஊடாக யாழ். மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.இந்த வழக்கு இன்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதன் போது வழக்கில் 1ஆம் எதிரியாக துமிந்த கெப்பிட்டி வெலான, 2ஆம் எதிரியாக இலங்கை இராணுவத் தளபதி மற்றும் 3ஆம் எதிரியாக சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், இன்று வழக்கை விசாரித்த நீதிபதி மா. இளஞ்செழியன் இராணுவத் தளபதியை அடுத்த தவணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளார்.