இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டுமல்லாமல் மலையகப் பகுதிகளிலும் தமிழர் அடையாளங்களை அழிக்க இலங்கை அரசு முயற்சித்து வருவதற்கு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து இலங்கை விடுதலை பெற்ற பின்னர், சிங்கள ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடி இந்திய வம்சாவழி தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டியவர் செளமியமூர்த்தி தொண்டமான்.
மலையக மக்களின் நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்த அவரைப் போற்றும் வகையில், இலங்கை மத்திய மாகாணத்தில், தொண்டமான் தொழிற்பயிற்சி மையம், தொண்டமான் கலாச்சார மன்றம், தொண்டமான் மைதானம் என சில அரசு நிறுவனங்களுக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இவற்றில் தொண்டமான் தொழிற்பயிற்சி மையத்துக்கு இந்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது. இந்நிலையில், இம்மையங்களில் இருந்து தொண்டமான் பெயரை நீக்கிவிட்டு, அந்தந்தப் பகுதியின் பெயரை இலங்கை ஆட்சியாளர்கள் சூட்டியுள்ளனர்.இந்த நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது. சிங்கள ஆட்சியாளர்களின் இந்த நடவடிக்கையை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். மேலும், அரசு மையங்களுக்கு மீண்டும் தொண்டமான் பெயரைச் சூட்டவும் பிரதமர் வலியுறுத்தவேண்டும்.” என விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்