தனது அமைச்சின் கீழ் காணப்படும் முக்கிய நிறுவனங்கள் இலாபம் ஈட்டுகின்றன : அமைச்சர் றிசாத்

பரீட் இஸ்பான்

நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த போது பொறுப்பேற்கப்பட்ட சதொச, சீனி, மற்றும் லக்சல மற்றும் அரச வரத்தக கூட்டுத் தாபனம் (STC) நிறுவனங்கள் இலாபத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்று (1) வொக்ஸ்வல் வீதியில் அமைந்துள்ள சதொச  நிறுவனத்தில்  இடம்பெற்ற ஊடகவியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக அரிசியின் விலை அதிகரித்தது இதனால் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய வாழ்க்கை செலவுக்கான அமைச்சரவை உப குழுவில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளுக்கிணங்க   நாடு முழுவதிலுமுள்ள 370 சதொச நிறுவனங்களினூடாக அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் வழங்கும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய ஒரு இலட்சம் மெட்ரிக்தொன் அரிசியை தற்போது இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. சதொச ஊடாக சில்லறையாகவும் மொத்தமாகவும அதனை நாம் விநியோகித்து வருவதோடு நடமாடும் சதொச வேலைத்திட்டத்தினூடாக 30 லொறிகளில் அத்தியாவசிப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இன்னும் ஒரு சில வாரங்களில் 100 லொறிகளில் நாட்டின் பல பிரதேசங்களுக்கும் அவற்றை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்  தெரிவித்தார். அத்துடன் அரிசித்தட்டுப்பாட்டை நிவர்த்திக்க மேலும் இரண்டு இலட்சம் மெட்ரிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

சந்தையில் சாதாரண விலைகளில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் கார்கில்ஸ், ஆர்பிகோ மற்றும் சந்தையில் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தக அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டுள்ளதாகவும் அவற்றினையும்  சாதாரண விலையில் அரிசியை விற்பனை செய்யுமாறு கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் றிஷாட் தெரிவித்தார்.

சதொச நிறுவனத்தினூடாக முகவர்களை இணைத்து அவர்களின் ஊடாக மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க ஆர்வமுள்ளவர்கள் தங்களை பதிவு செய்து, சதொச முகவர்களாக செயற்படும் வேலைத்திட்டம் நாளை (02) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதன் மூலம் நாட்டில் சகல பாகங்களுக்கும் சாதாரண விலையில் அத்தியாவசிப்பொருட்களை விநியோகிகக்க முடியும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

சதொசவை நாம்   பொறுப்பேற்கும் போது 300  ஆகக் காணப்பட்ட சதொச கிளைளை 370 ஆக அதிகரித்துள்ளோம். இன்னும் இரண்டு வாரங்களில் மேலும் 30 கிளைகளை ஆரம்பித்து 400 ஆக அதிகரிக்கவுள்ளதோடு, இவ்வருட இறுதியில் 500 கிளைகளை நாடு பூராகவும் விஸ்தரிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். 

அத்தோடு இன்று முதல் பொன்னி சம்பா அரிசி 80 ரூபாவிலிருந்து 78 ரூபாவுக்கும் பருப்பு 152 ரூபாவிலிருந்து 148 ரூபாவுக்கும் விற்கப்படுமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு நாட்டில் ஏற்;பட்ட தேங்காய் விலை அதிகரிப்பைக் கருத்திற்கொண்டு சதொச நிறுவனத்தினூடாக தேங்காய்களை கொள்வனவு செய்து 65ரூபாவுக்கு கொள்வனவு செய்து எந்தவித இலாபமுமின்றி அதே விலையிலேயே  விற்கப்படுவதாக அவர் தெரிவித்தார். 

இம்மாநாட்டில் சதொச நிறுவனத்தின் தலைவர் அமைச்சர் டி.எம்.கே.பி.தென்னக்கோன் அமைச்சின் மேலதிக செயலாளர் சீதா, மற்றும் கைத்தொழில் வரத்தக அமைச்சின் பணிப்பாளர்  இந்திக்கா மற்றும் பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.