சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால கனவான தனியான பிரதேச சபை அமைவதில் சிக்கல்கள் எதிர்நோக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை உருவாக்கித் தருமாறு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் பிரதமரின் பணிப்புரையின் பேரில் சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கப்படவிருந்த சந்தர்ப்பத்தில் பல்வேறு சக்திகளின் தலையீடு காரணமாக அச்செயற்பாட்டில் குழப்பங்கள் ஏற்பட்டு தற்போது முற்றாக கைவிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கல்முனை நகர சபையை இரண்டாகப் பிரித்து சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒரு அரசியல் கட்சி முன்வைத்துள்ளது. இன்னொரு கட்சியோ கல்முனை நான்காகப் பிரிக்கப்பட வேண்டும் என்றும் அதில் தமிழ்மக்களுக்கான பிரதேச சபையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.
எனினும் கல்முனை நான்காக பிரிக்கப்படுவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளவில்லை.அதே நேரம் கல்முனை மற்றும் சாய்ந்தமருது மக்களும் அவர்களின் சிவில் அமைப்புகளும் இவ்விடயத்தில் எதிரும் புதிருமான நிலைப்பாடுகளை கொண்டுள்ளதால் நிலைமை மேலும் சிக்கலாகியுள்ளது.
இந்நிலையில் சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபை என்ற விடயத்தை பிற்போட வழிசெய்யுமாறு அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு நெருக்கமான அரசியல் கட்சியொன்று கோரிக்கை விடுத்துள்ளது. அதனை ஏற்று சாய்ந்தமருது பிரதேச சபை தொடர்பான அறிவித்தல் இல்லாமலேயே வர்த்தமானி அறிவித்தலை வௌியிட அவர் நடவடிக்கை எடுத்து வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வௌியிட்டுள்ளது.