வெளிநாடுகளில் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர் குறித்து அரசாங்கம் எவ்வித பொறுப்பும் ஏற்காது ..!

 

வெளிநாடுகளில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் தமது நாட்டு தொழிலாளர்கள் குறித்து அரசாங்கம் எவ்வித பொறுப்பும் ஏற்காது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 

வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் இலங்கை குடிமகன், விசா காலம் முடிந்த பின்னர் அங்கு தொடர்ந்து பணியாற்றுவது என்பது சட்டத்திற்கு புரம்பானது. இத்தகைய செயல்கள் சிறை தண்டனை அல்லது அபராதம் செலுத்தக்கூடிய குற்றங்களாக எடுத்துக்கொள்ளப்படும்.

வெளிநாடுகளில் பணியாற்றுவோரின் உறவினர்கள் இதை குறிப்பிட்டு வலியுறுத்துமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் கேட்டுகொண்டுள்ளது.

விசா காலம் முடிவடைந்த பின்னரும், தொடர்ந்து பணிபுரிய வேண்டிய தேவை இருக்குமெனில், அதை சட்டரீதியாக அணுக அமைச்சு அறிவுறுத்துகின்றது. 

மத்திய கிழக்கு நாடுகள் உட்பட வெளிநாடுகளில் சுமார் 15 லட்சம் இலங்கையர்கள் பல்வேறு துறைகளில் பணி புரிகின்றனர். மத்திய கிழக்கு நாடுகளிலே பெரும்பாலானோர் தொழில் வாய்ப்புகளை பெற்றுள்ளனர். 

அதைத்தவிர இஸ்ரேல் , தென் கொரியா , சைப்பிரஸ், மலேசியா , ஜப்பான் போன்ற நாடுகளிலும் இலங்கை தொழிலாளர்கள் பணிபுரிவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாரியம் கூறுகின்றது.

வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பு பெற்றுள்ளவர்களில் குறிப்பிட்ட அளவிலான இலங்கை பணியாளர்கள் விசா காலம் முடிந்த பின்னர் அல்லது சட்ட ரீதியாக தொழில் பெற்றிருந்த நிறுவனங்களை விட்டு தப்பிச் சென்று சட்டவிரோதமாக தொழில் புரிவது பற்றி அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு வாரியம் தெரிவிக்கின்றது.

இந்நபர்களின் செயல்பாடுகள் நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பாக அமைவதாக கூறுகின்றார் வாரியத்தின் செயலாற்று இயக்குநர் உபுல் தேசப்பிரிய. 

குறிப்பாக தென் கொரியாவிடமிருந்து இலங்கை கிடைக்க வேண்டிய வேலை ஆட்கள் ஓதுக்கீடிற்கான எண்ணிக்கை இந்த ஆண்டு குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். 

இலங்கையிலிருந்து தென் கொரியாவிற்கு 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொழிலுக்காக ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் 5000த்துக்கும் அதிகமானோர் விசா காலம் முடிவடைந்தும் சட்டவிரோதமாக தங்கியிருந்து தொழில் புரிவதாகவும் உபுல் தேசப்பிரிய சுட்டிக்காட்டுகின்றார்.

“இது போன்ற நிலைமை இஸ்ரேலிலும் காணப்படுகின்றது. இதனால் எதிர்காலத்தில் இந்நாடுகளில் இலங்கைக்கு கிடைக்க வேண்டிய வேலை ஆட்கள் ஓதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறுகின்றார்.

இவ்வாறான நிலையில் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ள தமது நாட்டு பணியாளர்கள் தொடர்பாக அரசாங்கம் எந்தவித பொறுப்பும் எடுக்கவில்லை என இலங்கை வெளிநாட்டு வேலை வாயப்பு அமைச்சு வலியுறுத்தி கூறுகின்றது.

 

BBC