பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளில் நாளை முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் இன்று முன்னறிவிப்பு ஏதுமின்றி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் வந்தடைந்தார்.
காபுல் நகரின் தெற்கே உள்ள பக்ராம் விமானப்படை தளத்தில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, பிரதமர் அப்துல்லா அப்துல்லா ஆகியோரை சந்தித்து பேசிய ரெக்ஸ் டில்லர்சன், ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைதி நிலவவும், தீவிரவாதத்தை வேரறுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அமெரிக்கா உறுதுணையாக இருக்கும் என குறிப்பிட்டார்.
இங்குள்ள தலிபான் உள்ளிட்ட தீவிரவாதிகள் ஆயுத பலத்தால் நம்மை வெல்ல முடியாது என்பதை அவர்களுக்கு புரியவைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசில் வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் முதன்முறையாக தற்போது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.