புஸ்ராவின் ஆட்சியாளருக்கு இறை அழைப்பு விடுக்க நபி(ஸல்) கடிதம் ஒன்றை எழுதி அதை அல்ஹாரிஸ் இப்னு உமைர் அல்அஸ்தி (ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஆனால் அவர் கொல்லப்பட்டார். தூதர்களைக் கொலை செய்வது அரசியல் குற்றங்களில் மிகக் கடுமையானதாகவும் மிகக் கொடியதாகவும் கருதப்பட்டது. தனது தூதர் கொல்லப்பட்டதை, பகிரங்கப் போருக்கான அழைப்பாகக் கருதி நபி(ஸல்) 3000 வீரர்கள் கொண்ட பெரும் படையை அனுப்பி வைத்தார்கள்.
இப்போருக்கு ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களைப் படைத் தளபதியாக நபி(ஸல்) நியமித்தார்கள். ‘ஸைத் கொல்லப்பட்டால் ஜஅஃபர் தலைமையேற்கட்டும்! ஜஅஃபர் கொல்லப்பட்டால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா தலைமையேற்கட்டும்’ என்றும் நபி(ஸல்) கூறினார்கள்.
போருக்குச் சென்றவர்களிடம் நபி(ஸல்) கூறிய அறிவுரையாவது “அல்லாஹ்வை நினைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பாதையில், அல்லாஹ்வின் உதவியுடன் போர் செய்யுங்கள். குழந்தைகளை, பெண்களை, வயது முதிர்ந்தவர்களை, சர்ச்சுகளில் இருக்கும் மதகுருக்களைக் கொல்லாதீர்கள். எந்த மரங்களையும் வெட்டாதீர்கள், கட்டடங்களை இடிக்காதீர்கள்.
எதிரிப்படையில் ரோமர்களுடன் மற்ற கோத்திரத்தினரும் கைக்கோர்த்து இரண்டு லட்சம் பேர்களாகத் திரண்டனர். அதை அறிந்த முஸ்லிம்கள் பீதியடைந்து ‘இது பற்றி நபிகளாருக்கு அறிவிக்கலாமா, ஏதேனும் யோசனையைக் கேட்கலாமா..’ என்ற குழப்பத்திலிருந்த போது, அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) “நாம் எதிரிகளோடு போரிடுவது நமது ஆயுதங்களையும் ஆற்றலையும் கொண்டுதானே தவிர எண்ணிக்கையைக் கொண்டல்ல. அல்லாஹ் நமக்கு எந்த மார்க்கத்தின் மூலம் கண்ணியம் வழங்கியிருக்கின்றானோ அந்த மார்க்கத்திற்காகவே நாம் அவர்களிடம் போர் புரிகின்றோம். தயங்காமல் புறப்படுவோம், வெற்றி அல்லது வீரமரணத்தை அடைவோம்” என்று வீரமாக உரையாற்றினார்.
எதிரியைக் களம் காண இஸ்லாமியப் படை புறப்பட்டது. இது முஃத்தா என்ற இடத்தில் நிகழ்ந்ததால் இப்போருக்கு முஃத்தா என்று பெயர் வந்தது.