ஏ.எல்.நிப்றாஸ்
அக்கரைப்பற்று, பிரதான வீதியில் இன்று காலை பாரிய மரமொன்று வீழ்ந்ததால் இரு கடைகள் சேதமடைந்துள்ளதுடன் வாகனங்களும் மறுபுறத்தில் இருந்த கடைகளும் சேதமடைந்துள்ளன. அத்துடன் மின்கம்பி அறுந்து விழுந்ததால் சிறிய அளவில் தீயும் பரவியதுடன் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டிருந்தது. தெய்வாதீனமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.
இது தொடர்பாக இப்பகுதி கடைஉரிமையாளா்கள் ஏற்கனவே அறிவித்திருந்தும் அதிகாரிகள் கவனம் எடுக்காமல் அசமந்தமாக செயற்பட்டமையாலேயே இவ்விழப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்த கடை உரிமையாளா்கள் விசனம் தெரிவித்தனா்.
இந்த மரத்தை அல்லது கிளைகளை உரிய காலத்தில் வெட்டிப் பராமரிப்பது அதிகாரிகளின் பொறுப்பாகும். அக்கரைப்பற்று வீதியின் இருமருங்கிலும் இருக்கின்ற மரங்கள் இவ்விதம் பராமரிக்கப்படவில்லை. இதனால் பக்கத்தில் இருந்த கடைக் காரா்கள் இது தொடர்பாக எழுத்துமூலம் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும், மாநகர ஆணையாளருக்கும், மின்சார சபைக்கும் எழுத்துமூலம் அறிவித்துள்ளனா். ஆனால் பலன் எதுவுமில்லை.
இவ்வாறிருக்க மரம் விழுந்துவிடும் போல் தோன்றியதால் இந்த விடயம் மாநகர சபையின் முன்னாள் மேயருக்கும், தற்போதைய ஆணையாளருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் அத்துடன் இப்பணி வீதி. அபி. அதிகார சபைக்குரியது என்றும் சொல்லப்பட்டுள்ளது. மரம் விழுந்த பிறகு சுத்தப்படுத்தும் வேலைகளே மாநகர சபைக்குரியன என்று தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் இது தொடர்பாக பிரதேச செயலாளருக்கு அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டதாக அறிய வருகின்றது.
இதேவேளை, இன்று காலை இவ்விடயம் வீதி அபிவிருத்தி அதிகார சபை அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், மரம் விழுந்த பிறகே அதை சீர்படுத்துவதே தமது பணி என்றும், இதனை இப்போது வனப் பரிபாலன திணைக்களமே தறிக்க வேண்டும் என்றும் அவ் அதிகாரி சொல்லியதாகவும் கூறப்படுகின்றது.
இவ்வாறு பொறுப்பு வாய்ந்தவா்கள் – ஆளுக்காள் பந்தை கைமாற்றிக் கொண்டிருந்த நேரத்திலேயே மரம் விழுந்துவிட்டது. பொறுப்புடன் கொஞ்சம் முன்கூட்டி நடவடிக்கை எடுத்திருந்தால் இதை தடுத்திருக்கலாம் என்று பிரதேசவாசிகள் கூறுகின்றனா்.