ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களை இணைக்கும் வேலைத்திட்டத்தின் போது யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் போர்க் குற்றம் சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச வெளியிட்ட கருத்து குறித்து, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, பசில் ராஜபக்சவை கடுமையாக சாடியுள்ளார்.
போருக்கு பின்னர் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்படும் குற்றச் செயல்கள் தொடர்பாக கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அப்படியான சம்பவங்கள் நடந்திருப்பதாக கூறியிருந்தார்.
இது பாரதூரமான தவறு எனவும் இதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி உட்பட அனைவரது அரசியல் நடவடிக்கைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இந்த விடயம் தொடர்பில் கோத்தபாய ராஜபக்சவின் நிலைப்பாட்டிலேயே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பசில் ராஜபக்சவின் இந்த கருத்து காரணமாக தம்முடன் இருக்கும் சிங்கள தேசிய சக்திகளுக்கு பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த சக்திகள் தம்மிடம் இருந்து விலகிச் சென்றால் அதற்கு பசில் ராஜபக்ச பொறுப்புக் கூற வேண்டும் எனவும் ராஜபக்ச குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்தை திருத்திக்கொள்ளுமாறு பசில் ராஜபக்சவிடம் ராஜபக்ச குடும்பத்தினர் கேட்டுள்ளனர். எனினும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை இரண்டு தரப்பிலும் மேற்கொள்ள வேண்டும் என்பதால், தான் கூறிய கருத்தை திருத்திக்கொள்ள வேண்டிய தேவையில்லை என பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.