அமைச்சர் ஹக்கீமே , சமூகத்துக்காக கட்சியா? கட்சிக்காக சமூகமா?

மாகாண சபை தேர்தல் முறை மாற்றத்தில் றிஷாத், ஹக்கீம் மீது முன் வைத்த குற்றச் சாட்டு உண்மையானதா?

அண்மையில் முஸ்லிம்களை அதிகம் பாதிக்கக் கூடிய மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறி இருந்தது. இது தொடர்பில் முஸ்லிம் மக்கள், தங்களது அரசியல் வாதிகள் மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தனர். முஸ்லிம் மக்கள் விமர்சனங்களை முன் வைக்க முன்பே அமைச்சர் றிஷாத், தாங்கள் பிழை ஒன்றை அமைச்சர் ஹக்கீம் ஏற்படுத்திய நிர்பந்தத்தில் செய்ததாக குறிப்பிட்டிருந்தார். அவரது நியாயத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தடுக்க இருந்த வாய்ப்பு அமைச்சர்களான ஹக்கீமினதும் மனோ கனேசனினதும்  நழுவலோடு இல்லாமல் போய் இருந்ததால் அதனை எதிர்ப்பது சாதூரியமானதல்ல என்றது பிரதானமாகவிருந்தது.

சிந்தனை ரீதியாக நோக்குகின்ற போது தடுக்க முடியுமான எல்லை மீறிய நிலையில் அதனை எதிர்த்து எந்த பயனுமில்லை எனும் போது, எதிர்த்து அரசின் எதிர்ப்பை சம்பாதிக்காது ஆதரிப்பது சாதூரியமானது. புலி பதுங்கும் நேரத்தில் பதுங்கி பாயும் நேரத்தில் பாய்ந்தால் தான் மானை பிடிக்க முடியும். இப்படியான நியாயங்கள் அமைச்சர் ஹக்கீம் அணியினர் முன் வைக்காததுமல்ல. கடந்த ஆட்சியில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட போது மஹிந்த அரசை விட்டும் வெளியேற முஸ்லிம் அரசியல்வாதிகள் நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில் இது தகுந்த நேரமல்ல என்ற நியாயமே முன் வைக்கப்பட்டது.

அது மாத்திரமல்ல. பதினெட்டாம் அரசியலமைப்பு சீர் திருத்தத்தை நிறை வேற்ற மூன்றில் இரண்டு பெரும் பான்மை வேண்டும் என்ற நிலை வந்த போது ஓடிச் சென்று ஆதரவளித்த மு.காவின் தலைவர் தனது கட்சி பிளவை தடுக்கவே இதனை செய்தேன் என்ற நியாயத்தை பிற்பட்ட காலப்பகுதியில் முன் வைத்திருந்தார். மாகாண சபை தேர்தல் முறை மாற்றத்துக்கு  அமைச்சர் றிஷாத் வாக்களிக்க முன் வைத்த காரணத்தில் தான் வாக்களித்தும் பயனில்லை வாக்களிக்காது போனாலும் பயனில்லை என்ற நியாயம் இருந்தது. இவர் முன் வைத்த காரணத்தில் சமூகத்தின் நலனை விட கட்சியின் எதிர்காலத்தையே பிரதானமாக பார்த்துள்ளார். சமூகத்துக்காக கட்சியா? கட்சிக்காக சமூகமா? இதுவெல்லாம் வரலாற்றில் எழுதி வைத்து சிரிக்க வேண்டிய அமைச்சர் ஹக்கீமின் நியாயங்கள். அமைச்சர் ஹக்கீமின் நகைச்சுவை நியாயங்களை ஏற்றுக்கொண்ட போராளிகளுக்கு அமைச்சர் றிஷாதின் குறித்த நியாயத்தை ஏற்பது ஒன்றும் பெரிய விடயமல்ல.

அமைச்சர் றிஷாத் கூறுவதை அப்படியே  அமைச்சர் ஹக்கீம் மாற்றி விட்டிருந்தால் அமைச்சர் றிஷாத் பொறியில் அகப்பட்டிருப்பார். அமைச்சர் றிஷாத் முன் வைத்த குறித்த நியாயாம் போன்ற நியாயங்களை மு.காவின் போராளிகள் முன் வைக்கவும் தவறவில்லை. இங்குதான் ஒரு விடயத்தை நோக்க வேண்டும். அமைச்சர் றிஷாத், இச் சீர் திருத்தம் முஸ்லிம்களை பாதிக்கும் என்பதை அடித்து கூறுகிறார். அமைச்சர் ஹக்கீமோ இதில் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்புமில்லை. பழைய மாவட்ட ரீதியாகவே ஆசனம் கணக்கிடப்படும் என கூறுகிறார். அமைச்சர் மனோ கணேசனோ இதற்கு ஆதரவளிக்காவிட்டால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என அஞ்சி அவர் அதற்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை தெளிவாக கூறியுள்ளார். 

அமைச்சர் ஹக்கீம் இன்று முஸ்லிம்கள் விமர்சிக்கும் மாகாண சபை தேர்தல் முறைமைக்கு ஆதரவானவர். இப்போது ஆதரவாக கருத்து தெரிவிக்கின்றார் என்றால் அன்று ஆதரவு நிலைப்பாட்டையே கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை. அமைச்சர் ஹக்கீம் ஆதரவு நிலைப்பாட்டை அன்று வெளிப்படுத்தியிருந்தால் குறித்த மாகாண சபை தேர்தல் முறை மாற்றத்தை  தடுக்க இருத்த வாய்ப்பு சிறிதும் இல்லாமல் ஆகியிருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இதன் பிறகு அமைச்சர் றிஷாத் எதிர்த்திருந்தாலும் எந்த பயனுமிருந்ததிருக்காது. இக் கோணத்தை வைத்து சிந்தித்துப் பாருங்கள் இதில் உண்மை பொதிந்திருப்பதை அறிந்துகொள்ளச் செய்யும்.

இது பற்றி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் அவரது முக நூல் நேரலையில் கேட்கப்பட்ட போது அதில் உண்மையும் இல்லாமலில்லை என்ற கருத்தை கூறியிருந்தார். இவைகள் குறித்த மாகாண சபை தேர்தல் முறை மாற்றத்தை நிறைவேற்றுவதை தடுப்பதற்கு இருந்த வாய்ப்பை அமைச்சர் ஹக்கீமே இல்லாமல் செய்துள்ளார் என்ற விடயத்தை துல்லியமாக்குகின்றது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.