அடுத்தாண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் அதிபராக இருந்து வருபவர் விளாடிமிர் புதின். ஏற்கனவே 2000 முதல் 2008 வரை அதிபராக பதவி வகித்த இவர், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று உறுதிபட தெரிகிறது. இந்நிலையில், மாஸ்கோ நகரில் இது தொடர்பான கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த புதின், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறினார். இருப்பினும், அடுத்த மாதம் அல்லது டிசம்பர் மாதத்தில் மீண்டும் அதிபர் தேர்தலில் நிற்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அவரது அலுவலம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவை பொறுத்தவரை புதின் அளவுக்கு செல்வாக்கு பெற்ற தலைவர்கள் என்று பெரிய அளவில் தற்போது யாரும் இல்லை. இருப்பினும், முற்போக்கு கட்சித்தலைவர் அலெக்ஸி நாவன்லி புதினுக்கு எதிராக போட்டியிடும் பட்சத்தில், தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்படும் என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
சமீபத்தில் சட்டவிதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததாக கூறி அலெக்ஸி நாவன்லிக்கு 20 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.