தற்போது அங்கீகாரம் பெற்றுள்ள மாகாண சபை தேர்தல் முறை மாற்றமானது முஸ்லிம்களுக்கு மிகவும் ஆபத்தானது

கடந்த சில நாட்களாக 20ம் சீர் திருத்தம் மற்றும் மாகாண சபை தேர்தல் முறைமை மாற்றம் ஆகியவை பற்றிய கதைகள் சூடு பிடித்து காணப்படுகின்றன. இதில் 20ம் சீர் திருத்தமே பாரிய குற்றமாக கருதப்படுகிறது. மாகாண சபை தேர்தல் முறைமை மாற்றமானது 20ம் சீர் திருத்தம் போன்று எமது முஸ்லிம் சமூகத்தால் எதிர்க்கப்படாமைக்கு பல காரணங்கள் உள்ளன. உண்மையில் 20ம் சீர்திருத்தத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு பெரிதான பாதிப்புக்களில்லை. மாகாண சபை தேர்தல் முறைமை மாற்றம் என்பது முஸ்லிம் சமூகத்துக்கு மிகவும் ஆபத்தானது.

20ம் சீர் திருத்தத்தில் ஏதேனும் காரணங்களால் மாகாண சபை ஒன்று கலைப்படுமாக இருந்தால் அது பாராளுமன்றத்தின் கீழ் கொண்டுவரப்படும் என்றிருந்தது. அதன் உத்தியோகபூர்வமற்ற திருத்தத்தில் ( மு.கா நிறைவேற்றிக்கொடுத்த ), அவ்வாறு கலைப்பட்டால், 42 மாதங்களுக்கு முன்பு எனில் தேர்தல் நடாத்த வேண்டும் என்றும், பின் எனில் ஆளுநரின் கீழ் கொண்டுவரப்படல் வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இங்குள்ள பிரச்சினை, அவ்வாறு ஏதேனும் காரணத்தால் கலைக்கப்படும் மாகாண சபைகளின் அதிகாரங்கள் மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் செல்வதாகும். தற்போதுள்ள அரசியலமைப்பில் ஆளுநருக்கு மிகை அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அது மாத்திரமன்றி இன்னும் பல பகுதிகளினூடாக மாகாண சபைகளை மத்திர அரசானது மிக இலகுவாக கட்டுப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது. அவ்வாறான நிலையில் இது ஒரு பெரிய விடயமல்ல. இருந்த போதிலும் மத்திய அரசுக்கு மாகாண அதிகாரங்கள் இன்னுமின்னும் செல்லக் கூடாது என்ற சிந்தனை பலரிடையே உள்ளது.

மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் செல்வது முஸ்லிம்களுக்கு சாதகமானதா என்பது விவாதப்பொருளான விடயம். பலரும் கருதுவது போன்று மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் செல்வது முஸ்லிம்களுக்கு சாதகமானது என்ற வகையில் இப் பகுதியை சிந்திப்போம்.

தற்போதுள்ள மாகாண சபைச் சட்டத்தினூடாக, ஒரு மாகாண சபையானது ஏதேனும் ஒரு காரணத்துக்காக கலைக்கப்படுமிடத்து அது எப்போது மீள நடாத்தப்படும் என்பதை உறுபட கூற முடியாது. இதற்கு இவ்வரசானது வட மாகாண சபைத் தேர்தலை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நடாத்தாமல் இழுத்தடிப்பு செய்தமை சிறந்த உதாரணமாகும்.

கொண்டுவரப்பட்ட திருத்தச் சட்டத்தின் ஊடாக ஏனைய மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்தும் போது ஏதேனும் காரணத்தால் கலைக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தலையும் நடாத்த வேண்டும். 20ம் அரசியலமைப்புக்கு சீர் திருத்தத்துக்கு கொண்டுவர சிந்திக்கப்பட்ட திருத்தத்தினூடாக இன்னும் கால எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தன.

எனவே, இவைகளை வைத்து சிந்திக்கும் போது இதனை ஒரு சிறந்த திருத்தமாக நோக்கலாம். தற்போதுள்ள சட்டத்தின் அடிப்படையில், ஒரு மாகாண சபை கலைக்கப்படுமிடத்து, அடுத்த தினமே தேர்தலை அறிவிக்க முடியும். ஒரு குறித்த காலம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இருந்த போதிலும் தேதியை தீர்மானித்தல் அரசியலமைப்பில் உள்ள குறைபாடாகும். எனது அறிவுக்குட்பட்ட வகையில் இதில் பெரிதான பாதங்கள் உள்ளதாக தெரியவில்லை. இது மத்திய அரசு மாகாண சபை அதிகாரங்களை பறிக்கின்றது என்பது தெளிவற்ற குற்றச் சாட்டுக்களாகும்.

மேலும், மாகாண சபை நீடிக்கும் போது முஸ்லிம் ஒருவரே முதலமைச்சராக இருக்கப் போகிறார். அடுத்த தேர்தலொன்று நடக்கும் போது முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வருவாரா என்பது சந்தேகம். இருந்தாலும் இது விடயத்தில் மு.காவை விமர்சித்தமை அது கைக்கொண்ட பிழையான வழி முறையினாலேயாகும்.

ஆனால், தற்போது அங்கீகாரம் பெற்றுள்ள மாகாண சபை தேர்தல் முறை மாற்றமானது முஸ்லிம்களுக்கு அதிகம் பாதிப்பானதாகும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.