20ம் சீர் திருத்தம் : வாழ்க சாணக்கியம்..! வாழ்க போராளிகள்..!

20ம் சீர் திருத்தம் தொடர்பில் நாம் என்ன செய்தோம் என்ற விளக்கமில்லாத மு.காவின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்

கிழக்கு மாகாண சபையில் மாகாண சபைகளின் அதிகாரங்களை பறிக்கவல்ல 20ம் சீர் திருத்தம் நிர்வேற்றப்படுமா என்பது பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இருந்தது. ஏற்கனவே, பெரும்பான்மையின அதிகாரமுள்ள சபைகளில் அது தோல்வியை சந்தித்து வருவதாலும் வட மாகாண சபையிலும் தோல்வியை சந்தித்துள்ளதாலும் குறைந்தது கிழக்கு மாகாண சபையில் அதனை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளப்பட்டிருந்தது. அதனடிப்படையில் அதனை நிறைவேற்றிக்கொடுக்க மு.காவினர் எதிரணியினரிடம் பேரம் பேசுதலில் ஈடுபட்டதாக மாகாண சபை உறுப்பினர் சுபைர் கூறியிருந்தார்.

                                FILE IMAGE

இன்று கூடிய கிழக்கு மாகாண சபையின் போது ஒரு முடிவு எடுக்க முடியாமல் ஓடி ஒழித்து இறுதியில் வந்து ஆதரவு தெரிவித்துள்ளது. இது பற்றி கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான தவம் மற்றும் சிப்லி பாறூக் ஆகியோர் முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை தங்களது முக நூல்களிலே பதிவாக்கியுள்ளனர்.

மாகாண சபை உறுப்பினர் தவம் “20 ஆவது சரத்தில் திருத்தமாக உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள – திருத்தங்களை உள்ளடக்கிய – 20 ஆவது சரத்து சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.” என கூறியிருந்தார்.

மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் “20ம் சீர் திருத்தம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையால் திருத்தங்கள் முன் வைக்கப்பட்டுள்ளதோடு, அவை ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அதனை ஆதரிப்பதென்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.”என கூறியுள்ளார்.

இங்கு நீதி மன்றத்தில் முன் வைக்கப்பட்ட திருத்தங்களுடன் கூடிய 20ம் சீர் திருத்தம் நிறைவேற்றப்பட்டதா அல்லது மாகாண சபை திருத்தங்களை முன் வைத்து அதனை ஏற்றால் அன்கீகரிப்பதென முடிவெடுத்ததா என்ற குழப்பம் எழுகிறது. மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் நீதி மன்ற கதை பற்றி எங்குமே குறிப்பிட்டதாக இல்லை. அதாவது என்ன மாற்றம் இடம்பெற்றது என்பது அவர்களுக்கே தெரியவில்லை.

அது மாத்திரமன்றி தவத்தின் அறிக்கை மூலம் நீதி மன்ற திருத்தத்தின் பின்னரான 20ம் சீர் திருத்தம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஷிப்லியின் அறிக்கை மூலம் தாங்கள் முன் வைத்த திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அங்கீகரிக்கப்படும். இதனை இன்னுமொரு வகையில் சொல்வதானால் இன்னும் 20ம் சீர் திருத்தம் அங்கீகரிக்கப்படவில்லை. அதாவது 20ம் சீர் திருத்தம் அங்கீகரிகப்பட்டுவிட்டதா இல்லையா என்பது அவர்களுக்கே தெரியவில்லை.

இதில் யார் சொல்வது உண்மை?
இவர்கள் தங்களுடைய சிந்தனைகளை முன் நிறுத்தி வாக்களித்திருந்தால் இவ்வாறான குழப்பங்கள் ஏற்பட்டிருக்காது. கட்டளைக்கு அடிபணியும் போது சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்க எதற்கு அது பற்றிய அறிவு. பிழை தான் செய்யப்போகிறோம், அந்த பிழையை எவ்வாறு சரியாக செய்வது என்ற கலந்துரையாடல் ஒன்றை அமைத்திருந்தால் கூட இந்த குழப்பம் ஏற்பட்டிருக்காது. அதற்கு கூட மு.கா இடம் கொடுத்திருக்கவில்லை. இது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாத்திரம் சம்பந்தப்பட்ட விடயமல்ல. அனைவரும் ஒன்று கூடி முடிவு எடுத்திருக்க வேண்டும். அனைவரும் விவாதித்து முடிவெடுக்கும் காலம் எப்போதே மலையேறிவிட்டதல்லவா?

இதனையும் நியாயப்படுத்த ஒரு கூட்டம் வரும். கும்புடுதலை நியாயப்படுத்திய போராளிகளுக்கு இது எம்மாத்திரம்?

வாழ்க சாணக்கியம்..! வாழ்க போராளிகள்..!

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.