தாழிறக்கம் காரணமாக டொரிங்டன் தோட்ட மக்கள் இடம்பெயர்வு

க.கிஷாந்தன்

 

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்திற்கு சொந்தமான கல்மதுரை பிரிவில் 06 இலக்க தோட்டத்தொழிலாளர்களின் தொடர்குடியிருப்பு ஒன்று தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் ஐந்து வீடுகள் தாழிறங்கியுள்ளதால் அங்கு வாழ்ந்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் அருகிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் 07.09.2017 அன்று மாலை முதல் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக அங்கு வசிக்கும் 22 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 95 பேர் அவதான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அப்பிரதேசத்தில் வசிப்போர் தெரிவிக்கின்றனர்.

இக்குடியிருப்புக்களில் உள்ள சுமார் 05ற்கும் மேற்பட்ட வீடுகளில் பாரியளவில் வெடிப்புக்கள் ஏற்பட்டதன் காரணமாக  இவ் ஐந்து குடும்பங்களை வெளியேறுமாறு தோட்ட நிர்வாகமும், கிராம சேவகரும் அறிவித்ததாக இம் மக்கள் தெரிவித்தனர்.

வெளியேற்றப்பட்டவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் கிராம சேவகர் அவர்களினால் வழங்கப்பட்டுள்ளன.

1926 ஆண்டு கட்டப்பட்ட இக்குடியிருப்பு கடந்த காலங்களில் எவ்வித புனர் நிர்மானமும் செய்யப்படாத நிலையில் காணப்படுவாகவும், இதனால் மழைக்காலங்களில் வீட்டினுள் கூரையிலிருந்தும், பூமியிலிருந்து மழை நீர் கசிந்து வருவதாகவும், மழைநீர் காரணமாக தூக்கமின்றி பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வருவதாகவும்,  இந்த மழைநீர் மற்றும் நீர் கசிவு காரணமாக இக்குடியிருப்பு தாழ்ந்துள்ளதாகவும் இத்தாழ்வு காரணமாக தமது குடியிருப்புக்களுக்கும், உயிர்களுக்கும், சொத்துக்களுக்கும் ஆபத்து எற்பட்டுள்ளதாகவும் இக்குடியிருப்புக்களில் வாழ்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து தோட்டத் நிர்வாக்த்திடமும் அரசியல் வாதிகளிடமும் தெரிவித்த போதிலும், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஆபத்தான நிலையில் உள்ள தமது உயிர்களையும் சொத்துக்களையும் காப்பாற்ற உதவுமாறும் இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தாழிறக்கம் காரணமாக வெளியேற்றப்பட்ட மக்கள் தங்க வைக்கபட்டுள்ள இடத்தில் மின்சார வசதியோ, மலசல கூட வசதியோ, குடிநீர் வசதியோ கிடையாது. இதனால் கை குழந்தைகளுடனும் உள்ள தாய்மார்கள் மிகவும் சிரமமப்படுகின்றனர். பாடசாலை மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை தொடர முடியாது மிகவும் சிரமப்படுகின்றனர்.

எனவே இது குறித்து உரியவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.