சுஐப். எம்.காசிம்
யுத்தத்தின் கோரத்தழும்புகளாக மாறியிருக்கும் காணாமல்போனோர் பிரச்சினை, நீண்டகாலமாக சிறைகளில் வாடிக்கிடக்கும் அப்பாவி இளைஞர்களின் விடுதலை, காணிகளைப் பறிகொடுத்து வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களின் அவலம் போன்ற இன்னொரன்ன தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக கட்சி, பிரதேச, இனவேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக செயற்படுத்தப்படும் ‘நிலமெவகர’ ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டம் இன்று காலை (28) முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், காதர் மஸ்தான், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வடமாகாண அமைச்சர் சிவநேசன், வடமாகாண சபை உறுப்பினர் யாசீன் ஜவாஹிர் மற்றும் பிரதேச செயலாளர்கள், முப்படை உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் கூறியதாவது,
வன்னி மாவட்ட உறுப்பினர் என்ற வகையிலும், அமைச்சர் என்ற வகையிலும் பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் அமைச்சர் சுவாமிநாதனிடமும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுமாறு பல தடவை வலியுறுத்தியிருக்கின்றேன். தற்போதும் பகிரங்கமாக இந்த கோரிக்கையை நான் விடுக்கின்றேன்.
யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட, அதிக விலைகொடுத்த மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் விளங்குகின்றது. இந்த மக்கள் பட்ட அவலங்களையும், அவஸ்தைகளையும் நேரில் கண்டு வேதனை அடைந்தவர்களில் நானும் ஒருவன். இறுதி யுத்தத்தின் போது வெளியேறி தஞ்சமடைந்திருந்த 3இலட்சம் தமிழ் மக்களை யுத்தம் முடிந்து மீள்குடியேற்றினோம். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டாலும், இன்னும் ஆழமான பிரச்சினைகள் இருக்கின்றன.
கடந்த சில நாட்களாக முலலைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தில் சுமார் 42ஆயிரம் பிரச்சினைகள் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் கூறினார். இங்கு வாழும் அத்தனை குடும்பங்களுக்கும் குறைந்ததது ஒரு பிரச்சினையாவது இருப்பதையே இது வெளிப்படுத்துகின்றது. தற்போது இங்கு அரைவாசி பிரச்சினைகளுக்கு தீர்வும் காணப்பட்டுள்ளது. பொலநறுவையில் ஆரம்பிக்கப்பட்டு நாடாளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வரும் இந்த வேலைத்திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் இன்று இடம்பெறுகின்றது.
தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் அத்தனைக்கும் தீர்வுகள் கிடைக்கவேண்டும். யுத்தகாலத்தில் சரணடைந்தோ, அல்லது கைதுசெய்யப்பட்டோ இராணுவத்தின் பிடியிலிருந்த சுமார் 12ஆயிரம் இளைஞர்கள் படிப்படியாக உளநல சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு கட்டம்கட்டமாக விடுவிக்கப்பட்டனர். அந்த இளைஞர்கள் இன்றைய செயலணியிலும் பங்குபற்றியிருக்கலாம். தாய்மார்கள் தமது பிள்ளைகளை விடுவிக்கப்படுவதற்காக பட்ட கஷ்டங்கள் சொஞ்சநஞ்சமல்ல, அவர்களின் அழுகுரல்களும் வேதனையான வார்த்தைகளும் இன்றும் ஞாபகத்துக்கு வருகின்றது. ஆற்றலும் திறமையும் படைத்த இந்த இளைஞர்களின் பிரச்சினைகளும் நிவர்த்திக்கப்படவேண்டும்.
அதே போன்று சிறுசிறுகாரணங்களுக்காகவும், அற்ப சந்தேகங்களுக்காகவும் யுத்தம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் வாழும் இளைஞர்களையும் மனிதாபிமானத்தோடு விடுதலை செய்யுமாறு நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். அப்போது தான் சமாதானத்தின் மகிமையையும், உண்மையான தாற்பரியத்தையும் நாம் அடையமுடியும்.
யுத்தகாலத்திலும், யுத்தத்தின் பின்னரும், நேரகாலம் பாராது உங்கள் நலனுக்காக பணியாற்றிய அரச அதிகாரிகளையும் அலுவலர்களையும் நீங்கள் நன்றியுணர்வுடன் நோக்கவேண்டும்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் உறவு தழைப்பதற்கு அனைத்து சாராரும் பங்களிக்கவேண்டும். முன்னர் இங்கு வாழ்ந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் இங்கு மீள்குடியேறுவதற்கு காணிப்பிரச்சினை தடையாக இருக்கின்றது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண, அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஒருமித்து வழிகாணுவதோடு பொதுமக்களின் பங்களிப்பும் அத்தியாவசியமானது. இந்த மக்களின் நிம்மதியான இருப்புக்கு நீங்கள் அனைவரும் உதவவேண்டுமென அன்பாக வேண்டுகின்றேன் என்று அமைச்சர் தெரிவித்தார்.