சேனையூரின் மு.கா போராளிகளுக்கு…
இன்று 27 ம் திகதி உங்கள் கட்சியின் சாணக்கிய தலைவன் அப்துல் ரவூப் ஹிபத்துள் ஹக்கீம் உங்களை அபிவிருத்தி மழையில் நனைக்க தன் பரிவாரங்களுடன் வருகிறாராம்.
இரு வருடங்களுக்கு முன்னர் எந்தப்பிரதான வீதி தேர்தல் பிரச்சார மேடையில் வைத்து உங்களுக்குரிய தேசியப்பட்டியல் தொடர்பில் வாக்குறுதி அளித்தாரோ அங்கு இன்று அவர் அபிவிருத்தி மழையில் நனைக்க வருகிறாராம்.
இந்தக்கட்சியையும் மறைந்த தலைவரையும் உண்மைக்கு உண்மையாக நேசிக்கின்ற போராளிகளாக நீங்கள் இருந்தால் இன்று உங்கள் காலடி வரும் தலைவனிடம் அவருடைய நயவஞ்சகத்தனங்கள் , காலா காலாமாக அவரால் நடந்து வரும் வாக்குறுதி மீறல்கள் தொடர்பில் கேள்வி எழுப்புங்கள்.
நீங்கள்தான் இந்த மரத்தின் வேர்களும் விழுதுகளும், நீங்கள்தான் இந்த மரத்தை பற்றிப்பிடித்திருக்கும் போராளிகள். உங்களுக்கு இந்தக்கட்சியில் அனைத்து உரிமையும் இருக்கிறது.
நாலு அறைகளுக்குள் உருவாக்கிய பிள்ளைகள் வழிதவறி செல்லும் போது தட்டிக்கேட்கும் நேர்வழிப்படுத்தும் உரிமை எப்படி பெற்றோருக்கு இருக்கிறதோ அப்படித்தான். நான்கு பெட்டிகளுக்குள் வாக்களித்து உருவாக்கிய கட்சியும் அதன் தலைமையும், உறுப்பினர்களும் வழி தவறும் போது அவற்றை நேர்வழிப்படுத்துவதற்கான அனைத்து உரிமையும் போராளிகளான உங்களுக்கு இருக்கிறது.
இன்று வரும் உங்கள் தலைவரிடம்..
இரண்டு வருடங்களாக அலைக்கழிக்கப்படும் ஏமாற்றப்படும் உங்கள் பிரதேசத்திற்கு வாக்களிக்கப்பட்ட தேசியப்பட்டியல் தொடர்பில் கேள்வி எழுப்புங்கள்.
தற்காலிகமாக நம்பிக்கைக்கு வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் சல்மானிடம் இரண்டு வருடங்களாக இருக்கிறதே,
அந்த சல்மான் யாரென வினவுங்கள்.
‘தற்காலிகம்’என்றால் ஹக்கீமின் அகராதியில் எத்தனை வருடங்கள் என கேளுங்கள்.
அம்பாரை மாவட்டத்திற்கு வழங்கினால் தானே உங்களுக்கு முதலிடம் என்று உங்கள் தலைவர் சொன்னால், தற்போதுள்ள சல்மான் எந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்கிறார் என கேளுங்கள்.
எம்.பி மார்களுக்குரிய வாகன கோட்டாவை சல்மான் விற்றிருக்கிறாரே, அந்தப் பணத்திற்கு என்ன நடந்தது என கேளுங்கள்.
ஏனென்றால் , கட்சியால் நம்பிக்கைக்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட எம்.பி தானே அது.
உங்கள் ஊரில் உள்ள கட்சிப் பிரமுகர்களின் உட்கட்சி அதிகார மோதலை காரணம் காட்டி தப்பிக்க முனைந்தால், கிடைத்தால் எனக்கு கிடைக்க வேண்டும் இல்லாவிட்டால் ஊருக்கு வேண்டாம் என கூறும் நயவஞ்சக நரிகள் தொடர்பில் கேளுங்கள்.
மாகாண சுகாதார அமைச்சர்தான் தன் சுயநலத்திற்காய் இப்போது எம்.பி தேவையில்லை என கூறிய செய்திகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த சொல்லுங்கள்.
ஹஸனலி தான் தடுக்கிறார் என கூறி வந்தார்கள்தானே, அவர்தான் கட்சியை விட்டு வெளியேறி பல மாதங்களாகிட்டே இப்போது
யார் தடுக்கிறார் என்கின்ற மர்மத்தை அவிழ்க்க சொல்லுங்கள்.
கட்சிக்கும் , தலைமைக்கும் விசுவாசமாக இருந்த உண்மையான போராளி அட்டாளைச்சேனையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி அன்சில் அடுக்கடுக்காய் பாரதூரமான குற்றச்சாட்டுக்களை தலைமை தொடர்பிலும் இக்கட்சியிலுள்ளவர்கள் தொடர்பிலும் முன் வைக்கிறாரே அவற்றில் ஒன்றேனும் புரிந்திருந்தால் அது தொடர்பில் கேளுங்கள்.
சகோதரர் அன்சிலின் குற்றச்சாட்டுக்களின் படி..
இடமாற்றம், தொழில்வாய்ப்பு கேட்டு செல்லும் பெண் பிள்ளைகளை படுக்கைக்கு சுற்றுலா விடுதிகளுக்கு அழைக்கும் இக்கட்சியில் அதிகாரத்தில் உள்ளவர்கள் தொடர்பில் வினவுங்கள்.
போதைப்பொருள் கடத்தலுக்காய் தங்களுடைய உத்தியோகபூர்வ வாகனங்களை ஈடுபடுத்தும் கட்சியின் அதிகாரத்தில் உள்ளவர்கள் தொடர்பில் கேளுங்கள்.
இவற்றையெல்லாம் கேட்டால் தலைமை கோபித்து விடுமோ என நீங்கள் நினைத்தால், அல்லது இவற்றையெல்லாம் நீங்கள் கேட்காமல் விட்டால் அந்த தலைமை எனும் நயவஞ்சக நரி வழமையான அதன் நர்த்தனங்களை புரிந்து விட்டு செல்லும்.
வழமை போன்று முளைக்காத அடிக்கற்களை நட்டு விட்டு , யாரோ நிதியொதி்க்கிய கட்டிடங்களை கம்பீரமாய் புடைசூழ திறந்து விட்டு தன் அரசியல் எதிரிகளை வசைபாடி உங்கள் கரவொலிகளுக்கும் தக்பீர் முழக்கங்களுக்கும் இடையில் கட்சிப் பாடல்களுக்கு கையசைத்து விட்டு சென்று கொண்டே இருக்கும்.
முடிந்தது உங்களுக்குரிய இன்னுமோர் இரண்டு வருடத்திற்கான கட்சியின் பணி.
அ.க ஹசன் முக்சித்
20170827