முசலிப் பிரதேச மீள்குடியேற்றங்களை சட்டவிரோதமானது என பிரகடனப்படுத்துமாறு கோரிய தடை உத்தரவு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு

ஊடகப்பிரிவு

முசலிப் பிரதேசத்தில் இடம்பெற்ற மீள்குடியேற்றங்கள் சட்டவிரோதமானதெனவும் அவர்களுக்கு வழங்கப்பட்ட காணிகள் வன இலாக்காவுக்கு சொந்தமானது எனவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியலமைப்பு, சட்டவிவகார பணிப்பாளர் ருஷ்தி ஹபீப் தெரிவித்தார்.

 

கொழும்பு புதுக்கடையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். இந்த மாநாட்டில் செயலாளர் எஸ் சுபைர்தீனும் உரையாற்றினார். சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் கூறியதாவது,

இந்த வழக்கு மீள்குடியேறிய முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் முக்கியமானது எனவும் தடை உத்தரவு கொடுக்கப்பட்டிருந்தால் முஸ்லிம்கள் தமது குடியிருப்புக்களுக்குள் போகமுடியாத நிலை ஏற்பட்டிருக்கும் எனவும், இந்த வழக்கில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர் உட்பட பலர் இருந்த அதே வேளை எமது கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனும் ஒருவராக குறிப்பிடப்பட்டிருந்தார்.

 

அவர் சார்பில் வழக்கில் வாதாடிய சட்டத்தரணிகள் சட்ட நிலைப்பாட்டையும், நிகழ்வுகளையும், ஆதாரங்களுடன் எடுத்துரைத்து எமது நிலைப்பாட்டை விளக்கினர். இந்த வழக்கில், ஜீ.பி.எஸ் தொழில்நுட்பம் மூலம் 2012ம், 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வர்த்தமானி பிரகடனம் சட்ட விரோதமானதெனவும், எமது கட்சியின் தலைவர் சார்பில் வாதிட்ட சட்டத்தரணிகள் மிகவும் தெளிவாக உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைத்தனர். இதன் அடிப்படையில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

 

வர்த்தமானிப் பிரகடனத்தினால் எங்களுக்கு இருந்த மனக்கிலேசமும், சந்தேக தன்மையும் நிவர்த்தி செய்யப்படும் நிலையை இந்த வழக்கின் தீர்ப்பு வெளிப்படுத்தியுள்ளது. மீள்குடியேற்றத்தின் சட்டரீதியான தன்மையை கேள்விக்கு உட்படுத்தும் வகையிலான இந்த வழக்கை தள்ளுபடி செய்வதன் மூலம் மக்களின் சட்டபூர்வ வாழ்விட உரிமையை ஊர்ஜிதப்படுத்துகின்றது எனவும் ருஷ்தி ஹபீப் தெரிவித்தார்.