பாறுக் ஷிஹான்
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்ததன் பேரில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்கவின் விளக்கமறியல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று(25) எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது லலித் ஏ ஜெயசிங்க சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் சுவிஸ்குமாரை மக்கள் கட்டி வைத்திருந்தபோது அந்த இடத்தில் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் சென்று பார்வையிடும் காணொலியை நீதிபதிக்கு காண்பித்தனர்.
நீதிபதி மேற்படி காணொளி தொடர்பில் விசாரணை நடத்தி அடுத்த வழக்குத் தவணையின் போது அறிக்கை சமர்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.
2015ம் ஆண்டு மே மாதம் மாணவி வித்தியா கூட்டு பாலியலின் பின்னர் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் 10 பேர் கைது செய்யப்பட்டு விளக்க மறியிலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பி செல்வதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் லலித் ஏ ஜயசிங்க கடந்த 15 ஆம் திகதி குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கஇ ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்தும் அவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது