அல் – அர்ஹம் வித்தியாலயத்திற்கு புதிய காணியினை கொள்வனவு செய்வதற்கான நிதியினை ஒதுக்க எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை

 

எம்.ஜே.எம்.சஜீத்

    
 அட்டாளைச்சேனை அல் – அர்ஹம் வித்தியாலய மாணவர்களின் கல்வி நலன் கருதி புதிய காணியினை கொள்வனவு செய்வதற்கான நிதியினை ஒதுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை கிழக்கு மாகாண சபையில் கோரிக்கை விடுத்தார்.
 
கிழக்கு மாகாண சபையின் 80வது அமர்வு நேற்று (18) தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் நடைபெற்றது. இதன்போது கிழக்கு மாகாண எதிர்க்கட்சித்தலைவர் உதுமாலெப்பை அட்டாளைச்சேனை அல் – அர்ஹம் வித்தியாலய மாணவர்களின் கல்வி நலன் கருதி புதிய காணியினை கொள்வனவு செய்வதற்கான நிதியினை ஒதுக்குமாறு கோரி தனிநபர் பிரேரணை ஒன்றினை சமர்ப்பித்து உரையாற்றுகையிலே அவர் மேற்படி கோரிக்கையினை சபையில் முன்வைத்தார்.
 
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை அல் – அர்ஹம் வித்தியாலயம் கடந்த 2004 டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் முற்றாக சேதமடைந்து 2005.01.17ம் திகதியிலிருந்து 2007.02.03ம் திகதி வரை தனியார்களுக்கு சொந்தமான காணிகளில் கொட்டில்கள் அமைக்கப்பட்டு தற்காலிகமாக இயங்கி வந்தது.
 
அட்டாளைச்சேனை றகுமானியாபாத் பள்ளிவாசலினால் வழங்கப்பட்ட காணியில் (GTZ) அனுசரனையுடன் 12 வகுப்பறைகளுடன் கூடிய 02 மாடிக் கட்டிடங்கள் அமைக்கப்பட்டு 2007.02.04ம் திகதி இப்பாடசாலை திறந்து வைக்கப்பட்டது. இவ்வித்தியாலயம் சுனாமியினால் முற்றாக பாதிக்கப்பட்டு  அடிப்படை வசதிகள் எதுவுமின்றி தற்காலிக கொட்டில்களில் இயங்கி வந்த நிலையிலும் 2009ல் நடைபெற்ற க.பொ.த(சா.த) பரீட்சையில் தோற்றிய இப்பாடசாலை மாணவர்கள் 100% சித்திபெற்று கிழக்கு மாகாணத்தில் முதலிடத்தை பெற்றுக் கொண்டமை ஒரு சிறப்பம்சமாகும்.
 
இப்பாடசாலையில் 517 மாணவர்களுக்கு 17 வகுப்பறைகள் தேவையாக உள்ளது. ஆனால் தற்போது 12 வகுப்பறைகள் மாத்திரமே உள்ளன. தற்காலிக தகரக் கொட்டில்களில் 02 வகுப்புகள் இயங்கி வருவதுடன் 03 வகுப்புக்கள் இடமின்றி சமாந்தர வகுப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.
 
இப்பாடசாலையின் நலன்கருதி பாடசாலைக்கு அருகிலுள்ள தனியாருக்கு சொந்தமான காணியை காணிச் சொந்தக்காரரின் சம்மதத்துடன் பெறுவதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு விலை மதிப்பீட்டு திணைக்களத்தால் இக்காணிக்கான விலைமதிப்பு 2015.10.22ம் திகதி மதிப்பிடப்பட்டுள்ளது. இப்பாடசாலைக்கான காணியினை கொள்வனவு செய்வதற்கான நிதியினை பெறுவதற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு மக்கள் பிரதிநிதிகளும், பாடசாலை சமூகமும்  பல தடவைகள் கோரிக்கைகள் விடுத்த போதும் இக்காணி கொள்வனவுக்கான நிதி ஒதுக்கப்படவில்லை. 
 
இந்நிலையில் சென்ற 2016.09.29ம் திகதி இக்கல்லூரிக்கு கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர், சுகாதார அமைச்சர், அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிப்பாளர் ஆகியோர் வருகை தந்து இப்பாடசாலையின் நிலைமையை அவதானித்து 2017ம் ஆண்டின் நிதி ஒதுக்கீட்டில் இப்பாடசாலைக்கான காணியினை கொள்வனவு செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டும் இதுவரை இக்காணியினை கொள்வனவு செய்வதற்கான நிதி ஒதுக்கப்படாமை குறித்து மக்கள் பிரதிநிதிகளும், பாடசாலை சமூகமும், பாடசாலை மாணவர்களும், கவலை அடைந்த நிலையில் உள்ளனர்.
 
நானும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் வாழுகின்ற பிரதேசத்திலே அல்-அர்ஹம் வித்தியாலயம் அமைந்துள்ளது. நாங்கள் இரண்டு பேரும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சரிடம் இந்தக் கல்லூரிக்குரிய காணிகளை கொள்வனவு செய்து தருமாறு கோரிக்கை விடுத்த போதும் அந்த விடயம் தொடர்ச்சியாக இழுத்தடிப்புச் செய்யப்படுகிறது. கடந்த சுனாமியினால் முற்றாகப் பாதிக்கப்பட்ட இக்கல்லூரியின் நிலைமைகளை கடந்த 3வருட காலமாக கண்டுகொள்ளாமல் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு செயற்பட்டுள்ளது. இது குறித்து கவலைப்பட வேண்டியுள்ளது.
 
கிழக்கு மாகாண ஆட்சி எங்களது கைகளில் என மார்தட்டும் கிழக்கு மாகாண முதலமைச்சர் அண்மையில் இப்பாடசாலைக்கு நேரடியாக விஜயம் செய்து இக்காணியினை கொள்வனவு செய்து தருவதாகவும், இந்த வருடம் அதற்கான நிதி ஒதுக்கப்படும் எனவும் கல்வி அதிகாரிகள், பாடசாலை சமூகத்தினரிடம் வாக்குறுதியளித்தார். இது வரையும் இக்காணி கொள்வனவுக்கான நிதி ஒதுக்கப்படவில்லை இது குறித்து நாம் வெட்கப்பட வேண்டியுள்ளது.
 
எனவே, இக்கல்லூரி மாணவர்களின் கல்வி வளர்ச்சியினை கருத்திற் கொண்டு இக்கல்லூரிக்கான புதிய காணியினை கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உதுமாலெப்பை கேட்டுக்கொண்டார்.