சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து எல்லா சலுகைகளையும் அனுபவித்து வருவதாக டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக டி.ஜி.பி.க்கு அனுப்பிய 2 கடிதங்களில் சசிகலா என்னென்ன சொகுசு வசதிகளை சிறைக்குள் அனுபவித்து வருகிறார் என்பதை பட்டியலிட்டு இருந்தார்.
இதன் மூலம் சிறைக்குள் சசிகலாவுக்கு நவீன வசதிகள் கொண்ட சமையல் அறை அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் சசிகலாவுக்காக சிறைத்துறை அதிகாரிகள் 5 அறைகளை ஒதுக்கி கொடுத்திருந்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நேற்று ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் அதை உறுதிப்படுத்துவதாக இருந்தது.
பொதுவாக முறைகேடாக சொத்து சேர்த்த வழக்குகளில் சிக்குபவர்களுக்கு ஒரே ஒரு அறைதான் கொடுக்கப்படும். அதற்குள் கைதிகளுக்கு ஏற்ப ஒரு நாற்காலி, மேஜை வழங்கப்படும். வேறு எந்த சிறப்பு சலுகைகளும் கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் சசிகலா தேவையான எல்லா வசதிகளும் சிறைக்குள் கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது. சிறைச்சாலை பெண்கள் பிரிவின் முதல் மாடியில் அவருக்கு சமையல் அறை, படுக்கை அறை, பார்வையாளர் சந்திப்பு அறை, உடமைகள் வைக்கும் அறை, புழங்குவதற்கு ஒரு அறை என மொத்தம் 5 அறைகள் கொடுக்கப்பட்டிருந்தது. இவை தவிர சசிகலா நடமாடுவதற்காக தாழ்வாரத்திலும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்ததாக புகார்கள் கூறப்பட்டுள்ளன.
5 அறைகள் தவிர தனக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் சசிகலா சிறைக்குள் வரவழைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
சசிகலா தங்கி இருந்த 5 அறைகளின் வீடியோ காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியானது. இந்த நிலையில் அறைக்குள் சசிகலா தூங்குவது மற்றும் நடைபயிற்சி மேற்கொள்ளும் வீடியோ காட்சியை கன்னட தொலைக்காட்சியான பிரஜா டி.வி. ஒளிபரப்பியது.
மேலும் சசிகலா சம்பந்தப்பட்ட 4 நிமிட வீடியோ காட்சிகள் இன்று முதல் ஒளிபரப்பப்படும் என்று கன்னட டி.வி. சேனல்கள் அறிவித்து உள்ளன.
சசிகலா அனுபவித்து வந்த இந்த சிறப்பு சலுகைகள் வெளியில் தெரியவந்ததால் கர்நாடகா அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இது பற்றி விசாரணை நடத்த குழு அமைத்து உத்தரவிடப்பட்டது. ஆனால் அந்த குழு விசாரணையை தொடங்கும் முன்பே பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை காட்டிக் கொடுக்கும் ஆதாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதாக தெரியவந்துள்ளது.
சசிகலாவுக்காக அமைக்கப்பட்ட பிரத்யேக சமையல் அறை இடித்து அகற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது. 32 கைதிகள் வேறு ஜெயில்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். சிறைத் துறை டி.ஐ.ஜி. ரூபாய் உள்பட 4 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இவை சசிகலா விவகாரத்தில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
அத்துடன், பெங்களூர் பரப்பன அக்ரஹார ஜெயிலிலும் நேற்று கடும் கெடுபிடிகள் காணப்பட்டன. குறிப்பாக சசிகலாவுக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து சிறப்பு சலுகைகளும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டன. நேற்று சசிகலா வி.ஐ.பி. போல நடத்தப்படவில்லை. மற்ற சாதாரண கைதிகள் நடத்தப்படுவது போல நடத்தப்பட்டார்.
சசிகலாவுக்கு சிறைக்குள் இருந்த ஒரே பொழுதுபோக்கு டி.வி. பார்ப்பதுதான். அடுத்தடுத்து புகார்கள் குவிந்ததைத் தொடர்ந்து சசிகலாவுக்கு பிரத்யேகமாக வழங்கப்பட்டு வந்த டி.வி. கேபிள் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சசிகலாவுக்கு தனி அறைகள் ஒதுக்கி கொடுத்ததாக தகவல் வெளியானதால் தற்போது அவர் சிறையில் உள்ள வேறு ஒரு சாதாரண கைதிகள் அறைக்கு மாற்றப்பட்டதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
அவர் தங்கி உள்ள அறை அருகே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு அவர் சிறையில் நடமாடும் காட்சிகள் சிறை சூப்பிரண்டு மற்றும் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அறையில் உள்ள டி.வி.க்களில் ஒளிபரப்பாகும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே அவர் பார்வையாளரை பார்க்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறை வளாகத்தில் உள்ள தனி அறையில் அவர் பார்வையாளரை சந்திக்கக் கூடாது என்றும் சிறை வளாகத்தில் எல்லா கைதிகளும் பார்க்கும் இடத்தில் நின்று கொண்டே கம்பிக்கு வெளியே உள்ள பார்வையாளர்களிடம் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.